கழிவறையில் இளம்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது கோப்பையில் விழுந்ததால் தலையில் அடிபட்டு பரிதாப சாவு


கழிவறையில் இளம்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது கோப்பையில் விழுந்ததால் தலையில் அடிபட்டு பரிதாப சாவு
x
தினத்தந்தி 8 July 2017 12:51 PM IST (Updated: 8 July 2017 1:36 PM IST)
t-max-icont-min-icon

கழிவறையில் இளம்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை கோப்பையில் விழுந்ததால் தலையில் அடிபட்டு பரிதாபமாக இறந்தது.

கோவை,

கோவை பீளமேடு கருப்பராயன்பாளையம் ராமசாமி நகரை சேர்ந்தவர் லிங்கதுரை (வயது 30), எலெக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஈஸ்வரி (25). இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், ஈஸ்வரி 2-வது முறையாக கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான அவரை ஓரிரு நாட்களில் கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்க லிங்கதுரை முடிவு செய்து இருந்தார்.

ஆண் குழந்தை பிறந்தது

இதற்கிடையே, ஈஸ்வரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அது வழக்கம்போல வரக்கூடிய சாதாரண வயிற்றுவலி என்று நினைத்து ஈஸ்வரி கழிவறைக்கு சென்றார்.

அப்போது திடீரென்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. வேதனை தாங்க முடியாமல் அவர் அலறினார். உடனே வீட்டிற்குள் இருந்த லிங்கதுரை மற்றும் உறவினர்கள் அங்கு ஓடிவந்தனர்.

பரிதாப சாவு

அங்கு ஈஸ்வரி ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையிலும், கழிவறைக்குள் இருந்த கோப்பைக்குள் பச்சிளம் குழந்தை தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையிலும் கிடந்தது. உடனே அவர்கள் குழந்தை மற்றும் அதன் தாயை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே அந்த பச்சிளம் ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது. ஈஸ்வரிக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:-

தனியாக அனுப்பக்கூடாது

பெரும்பாலும் நிறைமாத கர்ப்பிணிகளை கழிவறைக்கு தனியாக அனுப்பக்கூடாது. ஏனென்றால் அவர் கள் கழிவறையில் அமர்ந்து இயற்கை உபாதையை கழிக்கும்போது குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது. இதேபோல தான் ஈஸ்வரிக்கும் நேர்ந்துள்ளது. கழிவறையில் பிறந்த குழந்தை, கோப்பைக்குள் விழுந்ததால் தலையில் காயம் ஏற்பட்டு இறந்துள்ளது.
எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள், கழிவறை செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 9 மாதத்துக்கு பின்னர் கர்ப்பிணிகளுக்கு எந்த நேரத்திலும் குழந்தை பிறக்க வாய்ப்பு இருப்பதால், அவர்களின் துணைக்கு யாராவது உடன் செல்ல வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story