14 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டிய கலெக்டர்
திருவண்ணாமலை கிரிவலப் பாதையை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் சைக்கிள் ஊர்வலம் நடந்தது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை கிரிவலப் பாதையை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் சைக்கிள் ஊர்வலம் நடந்தது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தூய்மையாக வைத்திருப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி சார்பில் தேரடி வீதி, காந்தி சாலையில் சைக்கிள் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கினார். திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, நகராட்சி ஆணையாளர் பாரிஜாதம் ஆகியோர் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.காந்தி சாலை அருகே தொடங்கிய ஊர்வலம் கிரிவலப் பாதையில் சென்று திருவண்ணாமலை துர்க்கை அம்மன் கோவிலில் நிறைவு பெற்றது. இதில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு 14 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டினர்.
இதையடுத்து துர்க்கை அம்மன் கோவில் குளத்தில் பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்து, தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.முன்னதாக கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே நிருபர்களிடம் கூறுகையில், ‘திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம், சித்ரா பவுர்ணமி மற்றும் ஒவ்வொரு மாதம் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். அப்போது பக்தர்கள், பொதுமக்கள் பிளாஸ்டிக் மற்றும் பிற பொருட்களை மலைப்பகுதியில் பயன்படுத்தக் கூடாது என்பதற்காகவும், குப்பை தொட்டியில் போட வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் திருவண்ணாமலை மலையை தூய்மைபடுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது கிரிவலப் பாதையில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக 14 கிலோ மீட்டர் கிரிவலப் பாதையில் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடத்தப்படுகிறது’ என்றார்.