தூத்துக்குடியில் புதிய முயற்சி காற்றில் சரிந்த மரம் வேரோடு பிடுங்கி இடமாற்றம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மரங்களை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் மரங்களை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது. இதனால் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். இதனால் மரம் வளர்ப்பு தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது.
இந்தநிலையில் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே சுமார் 25 ஆண்டுகள் பழமையான புங்கை மரம் வளர்ந்து நின்றது. இந்த மரம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீசிய பலத்த காற்றில் சரிந்து விழுந்தது. இதனால் அந்த மரத்தை அப்புறப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடியை பாதுகாப்போம் அமைப்பினர், சரிந்த மரத்தை மீண்டும் வளர்க்க முடிவு செய்தனர். இதனால் தூத்துக்குடி வனத்துறையை அணுகினர். அவர்கள் அறிவுரையின் பேரில் சரிந்த மரத்தை வேரோடு பிடுங்கி அருகில் உள்ள மைதானத்துக்குள் நட்டு வளர்க்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒருங்கிணைப்பாளர் துரைப்பாண்டியன் தலைமையில் மரத்தின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன. வெட்டப்பட்ட பகுதியில் மெழுகு பூசப்பட்டது. பின்னர் வேரோடு பிடுங்கப்பட்டு மைதானத்தில் நடப்பட்டது.