விக்கிரமசிங்கபுரம் அருகே முதலிரவு அறையில் இருந்து வெளியில் சென்ற புதுமாப்பிள்ளை மாயம்
விக்கிரமசிங்கபுரம் அருகே முதலிரவு அறையில் இருந்து வெளியில் சென்று வருவதாக கூறிச்சென்ற புதுமாப்பிள்ளை மாயமானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
விக்கிரமசிங்கபுரம்,
விக்கிரமசிங்கபுரம் அருகே முதலிரவு அறையில் இருந்து வெளியில் சென்று வருவதாக கூறிச்சென்ற புதுமாப்பிள்ளை மாயமானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
தொழிலாளிநெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள செட்டிமேடு மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் சவரிமுத்து. இவரது மகன் அந்தோணி ஜோசப்(வயது 29). இவர் கட்டிங்களுக்கு காங்கிரீட் போடும் பணிக்கு கம்பி கட்டும்(சென்ட்ரிங்) வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் செய்து வைக்க இவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதனையடுத்து பெண் பார்த்து வந்தனர்.
இதனையடுத்து பக்கத்து ஊரை சேர்ந்த ஒரு பெண்ணை பார்த்து பேசி அந்தோணி ஜோசப்புக்கும், அந்த பெண்ணுக்கும் திருமணம் செய்வதென முடிவு செய்தனர். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து ஆதரவற்ற அந்த பெண்ணை அவரது அத்தை எடுத்து வளர்த்து வந்தார். நர்சிங் படிப்பு படித்துள்ள அந்த பெண், நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வந்தார்.
திருமணம்இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகளை இருவரின் குடும்பத்தினரும் தீவிரமாக செய்து வந்தனர். உற்றார், உறவினர்கள், நண்பர்கள், ஊர்க்காரர்கள் முன்னிலையில் அந்தோணி ஜோசப்புக்கும், அந்த பெண்ணுக்கும் கடந்த 3–ந் தேதி பெண் வீட்டில் வைத்து திருமணம் நடந்தது. அன்று மாலை மாப்பிள்ளை வீட்டில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் அன்று இரவு முதலிரவு நடத்துவதற்கான ஏற்பாடுகளை மணமகன் வீட்டினர் செய்து இருந்தனர். மணமகன் வீட்டில் உள்ள ஒரு அறையில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இரவு 10 மணி அளவில் சாந்தி முகூர்தத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த அந்த அறைக்குள், தனது எதிர்கால வாழ்க்கை இனிமையாக தொடங்க உள்ள மகிழ்ச்சியில் மணப்பெண் உள்ளே நுழைந்துள்ளார்.
முதலிரவு அறையில் இருந்து வெளியேறினார்மணமகள் முதலிரவு அறைக்குள் நுழைந்ததும் அங்கு இருந்த அந்தோணி ஜோசப் சில நொடிகள் அமைதியாக இருந்துள்ளார். பின்னர் தனக்கு வயிறு வலிப்பதாகவும், வெளியில் சென்று விட்டு வருவதாகவும் மணப்பெண்ணிடம் கூறி விட்டு அந்த அறையில் இருந்து வெளியில் சென்றார்.
சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து ஆதரவற்று வாழ்ந்த தனக்கு இனிமேல் தாயாக, தந்தையாக, எல்லாமுமாக கணவர் இருப்பார் என்ற நம்பிக்கையிலும், தனது இல்லற வாழ்வு இனிமேல் சிறப்பாக அமையும் என்ற ஆர்வத்திலும் வெளியில் சென்ற கணவரின் வருகைக்காக காத்து இருந்தார் மணப்பெண்.
மாயமானார்நொடிகள், நிமிடங்களாயின. நிமிடங்கள் மணிகளாயின. நீண்ட நேரம் ஆகியும், வெளியில் சென்ற கணவர் அறைக்கு திரும்பாததால் மணப்பெண் தவித்துப்போனார். இதனையடுத்து நடந்த விவரத்தை அந்தோணி ஜோசப்பிடம் தெரிவித்தாள் அந்த பெண்.
தகவல் அறிந்து கல்யாண வீடே அதிர்ந்து போனது. வெளியில் சென்ற அந்தோணி ஜோசப்பை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இரவு முழுவதும் தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
போலீசார் தேடுகிறார்கள்இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசில் சவரிமுத்து புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் அவர், மாயமான தனது மகனை கண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் அந்தோணி ஜோசப்பை தேடி வருகிறார்கள்.
முதலிரவு அறையில் இருந்து புதுமாப்பிள்ளை மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.