திருப்பூர் மாவட்டம் முழுவதும் லோக் அதாலத் மூலம் 1,421 வழக்குகள் ரூ.26½ கோடிக்கு சமரச தீர்வு
திருப்பூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற லோக் அதாலத் மூலம் 1,421 வழக்குகள் ரூ.26 கோடியே 57 லட்சத்து 64 ஆயிரத்து 387–க்கு சமரச தீர்வு எட்டப்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள 6 தாலுகா கோர்ட்டு வளாகங்களில் நேற்று 15 அமர்வுகளாக தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நிகழ்ச்சி நடந்தது. திருப்பூரில் நடைபெற்ற 2 அமர்வுகளில் தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான அலமேலு நடராஜன் தலைமை தாங்கினார்.
தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜெகநாதன் மற்றும் முதன்மை சார்பு நீதிபதி முரளீதரன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். மேலும், கூடுதல் மாவட்ட நீதிபதிகள் ஜமுனா, ஜியாபுதீன், கூடுதல் சார்பு நீதிபதி அழகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
அந்த வகையில் மாவட்டம் முழுவதும் 275 மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு ரூ.20 கோடியே 73 லட்சத்து 30 ஆயிரத்து 592–க்கும், 10 காசோலை மோசடி வழக்குகளுக்கு ரூ.14 லட்சத்திற்கும், 7 குடும்ப நல வழக்குகளுக்கு ரூ.13 லட்சத்து 40 ஆயிரத்திற்கும், 91 சிவில் வழக்குகளுக்கு ரூ.4 கோடியே 42 லட்சத்து 39 ஆயிரத்து 574–க்கும் சமரச தீர்வு எட்டப்பட்டது.
மேலும், சமரசத்திற்குரிய 157 சிறு குற்ற வழக்குகளுக்கு ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 150–க்கும், 881 வங்கி வாரக்கடன் வழக்குகளுக்கு ரூ.1 கோடியே 13 லட்சத்து 17 ஆயிரத்து 71–க்கு என மொத்தம் 5 ஆயிரத்து 716 வழக்குகள் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 1,421 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.26 கோடியே 57 லட்சத்து 64 ஆயிரத்து 387–க்கும் சமரச தீர்வு எட்டப்பட்டது.