திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு சாவு, மகன் இறந்ததால் தந்தையும் தற்கொலை
நெய்வேலியில் திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு சாவு மகன் இறந்ததால் வாழ ஆசையில்லாமல் தந்தையும் தற்கொலை செய்து கொண்டார்
நெய்வேலி,
நெய்வேலியில் திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மகன் இறந்ததால் வாழ ஆசையில்லாமல் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
கடலூர் மாவட்டம் நெய்வேலி 21–வது வட்டம் இஸ்மாயில் தெருவை சேர்ந்தவர் ராஜி(வயது 58). தச்சு தொழிலாளி. இவரது மகன் சரவணகுமார்(28). இவர் தனது தந்தைக்கு உதவியாக இருந்து வந்தார். ராஜியின் மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தந்தை, மகன் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் சரவணகுமார் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தந்தையிடம் கேட்டார். அப்போது நீ இன்னும் சரியாக வேலைக்கு செல்ல வில்லை, அப்புறம் எப்படி திருமணம் செய்து வைப்பது. மேலும் தற்போது வசித்து வரும் வீட்டை இடித்துவிட்டு, புதிய வீடு கட்டியப்பின்னர் திருமணம் செய்து வைக்கிறேன் என்று சரவணகுமார் ராஜி தெரிவித்தார்.
இந்த நிலையில், ராஜி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனது மகள் கலாவதி(31) வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு நெய்வேலிக்கு திரும்பினார். அப்போது ராஜி வீட்டுக்கு சென்று பார்த்த போது, அங்கு உத்திரத்தில் சரவணகுமார் தனது தாயின் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜி, கதறி அழுதார்.
பின்னர் தனது மகனின் உடலை தூக்கில் இருந்து கீழே இறக்கி வைத்தார். தொடர்ந்து மகன் இல்லாத உலகில் தான் எதற்காக வாழ வேண்டும் என்று எண்ணிய அவர், சரவணகுமார் தூக்குப்போட்ட அதே புடவையால் அதே இடத்தில் ராஜியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று நீண்டநேரமாகியும் தந்தையும், மகனும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இந்த நிலையில் இவர்களது வீட்டிற்கு அருகே வசித்து வருபவரும் ஒரு சிறுவன் வழக்கம் போல் சரவணகுமாரின் வீட்டுக்கு டி.வி. பார்க்க சென்றான். அப்போது அங்கு ராஜி தூக்கில் தொங்கிய நிலையிலும், சரவணகுமார் பிணமாகவும் கீழே கிடந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த சிறுவன் அந்த பகுதி மக்களிடம் தெரிவித்தான். இதையடுத்து பொதுமக்கள் இதுபபற்றி உடனடியாக தெர்மல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ராஜி, சரவணகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், ராஜி கையால் எழுதிய கடிதம் ஒன்று அங்கு கிடந்தது. இதை போலீசார் கைப்பற்றி பார்த்தனர். அப்போது அதில், எனக்கு ஒரே பையன் அவனே இறந்துவிட்டதால் எனக்கு வாழ ஆசையில்லை எனவே, நானும் தற்கொலை செய்து கொள்கிறேன், எனது சாவுக்கு யாரும் காரணமில்லை என்று ராஜி அதில் எழுதியிருந்தார்.
இதற்கிடையே நடந்த சம்பவம் பற்றி அறிந்த கலாவதி நெய்வேலிக்கு விரைந்து வந்தார். தொடர்ந்து கடலூர் மருத்துவமனையில் உள்ள தனது தந்தை, தம்பியின் உடலை பார்த்து அவர் கதறி அழுதார். இதுகுறித்து கலாவதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நெய்வேலியில் ஒரே வீட்டிற்குள் தந்தை, மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.