மக்கள் நீதிமன்றம் மூலம் 2,666 வழக்குகளுக்கு சமரச தீர்வு


மக்கள் நீதிமன்றம் மூலம் 2,666 வழக்குகளுக்கு சமரச தீர்வு
x
தினத்தந்தி 9 July 2017 4:15 AM IST (Updated: 9 July 2017 2:28 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 2,666 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

தர்மபுரி,

சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு ஆகியவற்றின் ஆணைப்படி, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலுடன் தேசிய மக்கள் நீதிமன்றம் தர்மபுரி மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி தர்மபுரி கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பி.ரவி தேசிய மக்கள் நீதிமன்றத்தை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

விபத்து வழக்குகள் தீர்ப்பாய சிறப்பு மாவட்ட நீதிபதி சீதாராமன், தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு மணி, சார்பு நீதிபதி சண்முகவேல், குடும்ப நல கோர்ட்டு நீதிபதி சந்திரன், மாவட்ட உரிமையியல் நீதிபதி செகனாஸ்பானு, மாஜிஸ்திரேட்டுகள் ஜீவாபாண்டியன், அல்லி, விரைவு கோர்ட்டு குற்றவியல் மாஜிஸ்திரேட்டு சண்முகவேல்ராஜ், ஓய்வுபெற்ற நீதிபதி பாலு ஆகியோர் மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்று இருதரப்பினரையும் அழைத்து பேசி வழக்குகளுக்கு சமரச தீர்வு கண்டனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் மக்கள் நீதிமன்றத்தை நடத்தினார்கள். இதில் வழக்குதாரர்கள், வக்கீல்கள் திரளாக பங்கேற்றனர். மக்கள் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள், வங்கி வழக்குகள், காசோலை வழக்குகள், விபத்து இழப்பீடு வழக்குகள், குடும்ப நல வழக்குகள் என 3,051 வழக்குகள், வங்கி வாரக்கடன் தொடர்பான 5,677 வழக்குகள் என மொத்தம் 8,728 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

இந்த விசாரணையின் முடிவில் 2,666 வழக்குகளில் ரூ.5 கோடியே 15 லட்சத்து 53 ஆயிரத்து 337 தொகைக்கு சமரச தீர்வு காணப்பட்டது. சமரச தீர்வு காணப்பட்ட வழக்குகளுக்கான கோர்ட்டு உத்தரவு நகல்களை நீதிபதிகள் சம்பந்தப்பட்ட வழக்குதாரர்களிடம் வழங்கினார்கள். 

Related Tags :
Next Story