மக்கள் நீதிமன்றத்தில் 2,950 வழக்குகளுக்கு சமரச தீர்வு ரூ.10 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது


மக்கள் நீதிமன்றத்தில் 2,950 வழக்குகளுக்கு சமரச தீர்வு ரூ.10 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 9 July 2017 4:30 AM IST (Updated: 9 July 2017 2:30 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் நீதிமன்றத்தில் 2,950 வழக்குகளுக்கு ஒரே நாளில் சமரச தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.10¼ கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது.

திருச்சி,

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு புதுடெல்லி மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சென்னை வழிகாட்டுதலின்படி தேசிய மக்கள் நீதிமன்ற அமர்வுகள் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்சி, துறையூர், முசிறி, லால்குடி, மணப்பாறை ஆகிய நீதிமன்றங்களில் நேற்று நடந்தது. மொத்தம் 19 அமர்வுகளில் நடந்த இந்த மக்கள் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், சேவை குறைபாடு வழக்குகள் உள்பட மொத்தம் 13 ஆயிரத்து 567 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

இவற்றில் 2,950 வழக்குகளுக்கு ஒரேநாளில் சமரச தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் உரியவர்களுக்கு ரூ.10 கோடியே 24 லட்சத்து 28 ஆயிரம் இழப்பீடாக பெற்று வழங்கப்பட்டது. முன்னதாக தேசிய மக்கள் நீதிமன்றத்தினை திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமாகிய குமரகுரு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தேசிய மக்கள் நீதிமன்ற அமர்வுகளுக்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான கீதா மற்றும் ஊழியர்கள் செய்து இருந்தனர். 

Next Story