முழுஅடைப்பின் போதும் வழக்கம்போல் ஆய்வு பணியில் ஈடுபட்ட கவர்னர் கிரண்பெடி


முழுஅடைப்பின் போதும் வழக்கம்போல் ஆய்வு பணியில் ஈடுபட்ட கவர்னர் கிரண்பெடி
x
தினத்தந்தி 9 July 2017 3:45 AM IST (Updated: 9 July 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

முழு அடைப்பு போராட்டத்தின் போதும் கவர்னர் கிரண்பெடி வழக்கம்போல் ஆய்வுப் பணி மேற்கொண்டார்.

புதுச்சேரி,

கவர்னர் கிரண்பெடி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் துப்புரவு மற்றும் ஆய்வுப் பணிகளில் ஈடுபடுவது வழக்கம். கடந்த வாரம் பிச்சாவீரன்பேட்டில் அவர் துப்புரவு பணியில் ஈடுபட்டபோது அவருக்கு எம்.என்.ஆர்.பாலன் எம்.எல்.ஏ. எதிர்ப்பு தெரிவித்தார்.

இதற்கிடையே நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம் தொடர்பாக மத்திய அரசுக்கும், கவர்னர் கிரண்பெடிக்கும் எதிர்ப்பு தெரிவித்து புதுவையில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடந்தது.

இருந்தபோதிலும் அவர் தனது ஆய்வுப்பணியை நிறுத்தவில்லை. வழக்கம்போல் காலையில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு பணியில் ஈடுபட்டார்.

சைக்கிளில் கவர்னர் மாளிகையில் இருந்து சைக்கிளில் புறப்பட்ட கவர்னர் கிரண்பெடி லாஸ்பேட்டையில் உள்ள என்.சி.சி. தலைமை அலுவலகத்துக்கு சென்று ஆய்வுப் பணியில் ஈடுபட்டார். என்.சி.சி. மாணவ, மாணவிகளுக்கு அவர் அறிவுரைகளை வழங்கினார்.

அதன்பின் கவர்னர் மாளிகைக்கு திரும்பினார். கவர்னர் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் அருகே வந்தபோது அவரது சைக்கிள் செயின் கழன்றுவிட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு சைக்கிளை விட்டு இறங்கி சிறிதுநேரம் நின்றார். இதைத்தொடர்ந்து சைக்கிள் செயினை போலீசார் உடனடியாக சரி செய்தனர். அதன்பின் கவர்னர் தனது சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடந்ததால் வழக்கத்தைவிட சற்று அதிகமாக போலீசார் கவர்னருடன் பாதுகாப்புக்காக சென்றனர்.


Next Story