மும்பையில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் பலி சாவு எண்ணிக்கை 16 ஆனது


மும்பையில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் பலி சாவு எண்ணிக்கை 16 ஆனது
x
தினத்தந்தி 9 July 2017 3:29 AM IST (Updated: 9 July 2017 3:29 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் பலியானார். இதன் மூலம் சாவு எண்ணிக்கை 16 ஆக அதிகரித்து உள்ளது.

மும்பை,

மும்பையில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் பலியானார். இதன் மூலம் சாவு எண்ணிக்கை 16 ஆக அதிகரித்து உள்ளது.

பன்றிக்காய்ச்சல்

மும்பையில் மழைக்கால நோய்கள் வேகமாக பரவி வருகின்றன. அதிலும் பன்றிக்காய்ச்சலால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கர்ப்பிணிகள் உள்பட பலர் உயிரிழந்தனர். இந்தநிலையில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் பலியாகி உள்ளார்.

மும்பை போரிவிலியை சேர்ந்தவர் சூர்யகாந்த். இவரது மனைவி மாலதி(வயது41). இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2 வாரங்களுக்கு முன் இவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது.

இதற்கு அவர் மருந்து சாப்பிட்டார். பின்னர் 2 நாட்களுக்கு பிறகு கடுமையான இருமலால் அவதிப்பட்டார். இதையடுத்து சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

பெண் பலி

டாக்டர்கள் பரிசோதனையில் மாலதிக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் உடனடியாக கஸ்தூர்பா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் மாலதியை வென்டிலேட்டரில் வைத்து தீவிர சிகிச்சை அளித்தனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி 2 நாட்களுக்கு பின் மாலதி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்ததை மும்பை மாநகராட்சி உறுதிப்படுத்தி உள்ளது.

மாலதியின் உயிரிழப்பு மூலம் மும்பையில் இந்த ஆண்டு பன்றிக்காய்ச்சல் சாவு எண்ணிக்கை 16 ஆக அதிகரித்து உள்ளது.


Next Story