மாமல்லபுரம் சுற்றுலா தலங்களில் பாலித்தீன் பைகள் கொண்டு செல்ல தடை
மாமல்லபுரம் சுற்றுலா தலங்களில் பாலித்தின் பைகள் கொண்டு செல்ல தொல்லியல் துறை தடை விதித்துள்ளது.
மாமல்லபுரம்,
மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்கள் ஐ.நா. சபையின் யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட நினைவு சின்னங்களாக திகழ்கிறது. இந்திய அளவில் சுற்றுலா பயணிகள் அதிகம் கண்டு களிக்கும் இடங்களாக ஆக்ராவில் உள்ள தாஜ்மகால் முதல் இடமும் மாமல்லபுரம் கடற்கரை கோவில் 2-வது இடத்திலும் உள்ளது.
அதனால் மத்திய தொல்லியல் துறை மாமல்லபுரம் சுற்றுலா தலங்களை மிகவும் கவனமாக பாதுகாத்து பராமரித்து வருகிறது. இதில் ஆண்டுக்கு ஒரு முறை மாமல்லபுரம் கடற்கரை கோவில் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை உப்புக்காற்று அரிக்காத வண்ணம் ரசாயன கலவை பூசி பாதுகாத்து வருகிறது.
பாலித்தீன் பைகளுக்கு தடை
இந்தநிலையில் தற்போது சுற்றுச்சூழல் மாசால் புராதன சின்னங்கள் பாதிப்புக்குள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளதால் தொல்லியல் துறை நிர்வாகம் சுற்றுலா தலங்களை கண்டுகளிக்க மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் இனி பாலித்தின் பைகளை கொண்டு வர தடைவிதித்துள்ளது. இதுகுறித்து கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் இடத்தில் தொல்லியல் துறை நிர்வாகம் தகவல் பலகை அமைத்து அறிவுறுத்தி உள்ளது. தொல்லியல் துறையின் அறிவிப்புக்கு மாமல்லபுரம் வியாபாரிகள் சங்கமும் ஆதரவு தெரிவித்து, மாமல்லபுரம் புராதன சின்னங்களை பாதுகாக்கும் பொருட்டு இனி பாலித்தின் பைகள் போன்ற பொருட்களை விற்க கூடாது என்றும், அதற்கு பதில் துணிகளால் ஆன பைகளை சுற்றுலா பயணிகளுக்கு வழங்க சிறு, குறு வியாபாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக மாமல்லபுரம் வியாபாரிகள் நலச்சங்க தலைவர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.
100 சதவீதம் பிளாஸ்டிக் இல்லா நகரமாக மாமல்லபுரத்தை கொண்டு வர தொல்லியல் துறையுடன் இணைந்து சுற்றுலா பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் அறிவுறுத்தும் வகையில் வியாபாரிகள் சங்கமும், பேரூராட்சியும் இணைந்து விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
Related Tags :
Next Story