உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 9 July 2017 8:42 AM IST (Updated: 9 July 2017 8:42 AM IST)
t-max-icont-min-icon

அது ஒரு சிறு நகரம். அங்கே ஒரே ஒரு தங்கநகைக் கடை இருக்கிறது. எப்போதாவதுதான் அங்கு நகை வியாபாரம் நடக்கும்.

து ஒரு சிறு நகரம். அங்கே ஒரே ஒரு தங்கநகைக் கடை இருக்கிறது. எப்போதாவதுதான் அங்கு நகை வியாபாரம் நடக்கும். ஆனால் பல பெண்கள் அவரிடம், தாங்கள் விரும்பியது போன்ற டிசைனில் நகைகள் செய்து தர ஆர்டர் கொடுப்பார்கள். அவரும் பணியாளர்கள் மூலம் கலைநுட்பத்தோடு அதை செய்து கொடுப்பார். அதனால் அந்த ஊரில் அவருக்கு நல்லபடியாக வியாபாரம் நடந்துகொண்டிருந்தது.

அன்று ஆள் இல்லாத நேரம் பார்த்து ஒரு பெண்ணும், இரு ஆண்களும் கடைக்குள் நுழைந்தனர். அவர்கள் கட்டிடத்தொழிலாளிகள் சாயலில் காணப்பட்டனர். மூவருமே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு சரிவர தமிழ் பேச வரவில்லை.

பீகாரில் இருந்து கட்டிட வேலைக்கு வந்ததாகவும், அஸ்திவார பில்லருக்கு குழி தோண்டியபோது ஒரு பானையில் இருந்து தங்கக்காசுகள் கிடைத்ததாகவும் கூறினார்கள். ‘இதை வேறு யாரிடமாவது சொன்னால் எங்களை கொன்றுவிட்டு தங்கக்காசுகளை அபகரித்துவிடுவார்கள். இந்த ஊரில் நீங்கள் நியாயமான நகை வியாபாரி என்று பலரும் சொன்னதால் உங்களிடம் வந்தோம். பொற்காசுகளை வைத்துக்கொண்டு பணம் தாருங்கள்’ என்றார்கள்.

நகை கடைக்காரருக்கு நம்பிக்கை வரவில்லை. அவர்கள் மூவரையும் மேலும் கீழுமாக பார்த்தார். உடனே அவர்கள், ‘தங்கக் காசுகளை காட்டட்டுமா?’ என்று கேட்டபடி, இரண்டு நாணயங்களை எடுத்து அவரிடம் நீட்டினார்கள். அவை ஒரு ரூபாய் நாணயம் அளவு இருந்தது. ஒரிஜினல் தங்கக்காசு.

இரண்டும் தங்கக்காசு என்பதை உறுதி செய்துகொண்ட அவர், மீதம் எங்கே இருக்கிறது என்று கேட்க, கையில் இருந்த பையை திறந்துகாட்டினார்கள். அவர் தனது கை நிறைய நாணயங்களை அள்ளி எடுத்தார். அனைத்தும் ஒரே தினுசில் இருந்தது. தங்க நாணயத்திற்கான எடையுடனே காணப்பட்டது.

மொத்தம் ஆயிரத்துக்கு மேற்பட்ட நாணயங்கள் இருப்பதாக சொன்னார்கள். அதை எடைபோட்டு உத்தேசமாக கணக்கிட்டபோது பல லட்ச ரூபாய் மதிப்பிற்குரியதாக இருந்தது. ஆனால் மதிப்பிட்ட தொகையில் பாதி கொடுத்தால் போதும் என்று அவர்கள் சொன்னார்கள். ‘அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை’ என்று அவர் கூறினார்.

உடனே அந்த கூட்டத்தில் இருந்த பெண், ‘கையில் எத்தனை லட்சம் இருக்கிறதோ அதை கொடுங்கள். மீதிக்கு உங்கள் கடையில் இருக்கும் தங்க நகைகளை தாருங்கள்’ என்றாள்.

அவர், ‘பணத்தை சேகரித்துவைக்கிறேன். இரண்டு நாட்கள் கழித்து வாருங்கள்’ என்று கூறினார். அவர்களும் சரி என்று கூறிவிட்டு, தங்கள் செல்போன் நம்பரை கொடுத்துவிட்டு சென்றார்கள்.

இரண்டு நாளில் திரும்பி வந்தார்கள். கடைக்குள் வந்து அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோதே, அங்கே சாதாரண உடையில் நின்றிருந்த போலீசார் அவர்களை பிடித்தனர். அவர்களிடமிருந்த பையை ஆராய்ந்தபோது, அவர்கள் முதலில் காட்டிய 2 நாணயங்கள் மட்டுமே தங்கம் என்பதும் மீதி அனைத்தும் போலி தங்க நாணயம் என்பதும் தெரிந்தது. ஆனால் எடையிலும், தோற்றத்திலும் அவை ஒரிஜினல் போலவே இருந்தது. விசேஷ கவனம் செலுத்தி அதனை வார்த்து எடுத்திருக்கிறார்கள்.

இவர்களை போன்ற வட இந்திய குழுக்கள் சில, தென்னிந்திய மாநிலங்களில் உள்ள சிறு நகரங்களில் இருக்கும் நகைக்கடைகளை குறிவைத்து மோசடி வலை விரித்துக்கொண்டிருக்கின்றன!

- உஷாரு வரும்.

Next Story