டெல்லியில் வசிக்கும் ஆப்பிரிக்கர்களின் காதல்.. கவலை.. கண்ணீர்..


டெல்லியில் வசிக்கும் ஆப்பிரிக்கர்களின் காதல்.. கவலை.. கண்ணீர்..
x
தினத்தந்தி 9 July 2017 10:07 AM IST (Updated: 9 July 2017 10:07 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு எதிராக இன, நிற பாகுபாடு பிரச்சினை தலைதூக்கும்போது ஓங்கி குரல் கொடுக்கிறோம்.

வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு எதிராக இன, நிற பாகுபாடு பிரச்சினை தலைதூக்கும்போது ஓங்கி குரல் கொடுக்கிறோம். அது நம் உரிமை. அதே நேரத்தில் இந்தியாவிலும் வெளிநாட்டவர்கள் மீது இனவெறி பிரயோகம் நடந்தேறி வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. தரமான கல்வி தேடி இந்தியாவுக்கு ஏராளமான ஆப்பிரிக்கர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் சமீபகாலமாக நம் நாட்டில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் தங்கிப் படிக்கும் ஆப்பிரிக்கர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள்.

டெல்லி, லாஜ்பத் நகரில் தங்கிப் படித்து வரும் நைஜீரியாவைச் சேர்ந்த ஒலிவர் சொல்கிறார்:

“நான் தங்கி இருக்கும் வீட்டிற்கு குறுகியத் தெருக்களை கடந்து செல்ல வேண்டும். நான் தெருவைக் கடக்கும்போது பால்கனியி லிருந்து சிலர் செருப்பை வீசுவார்கள். வாளியில் தண்ணீர் எடுத்து வந்து என் மீது கொட்டுவார்கள். அந்த பகுதியில் வசிப்பவர்கள் கூடி நின்று அவமானகரமான வார்த்தைகளைப் பேசுவார்கள். சிலர் என்னை பார்த்து ‘பிளாக் மங்கி’ என்றெல்லாம்கூட கூறுவார்கள். இப்படி பல கொடுமைகளை அனுபவிக்கிறேன்.

இங்கு நடக்கும் சம்பவங்களை என் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்துவதில்லை. அவர்களுக்கு தெரிந்தால் கவலையடைந்து, ‘படித்தது போதும். திரும்பி வந்துவிடு’ என்பார்கள். இங்குள்ள சிலரது தவறான நடத்தையால் என் படிப்பு பாழாவதை நான் விரும்ப வில்லை. இந்திய படிப்பிற்கு எங்கள் நாட்டில் நிறைய மதிப்பிருக் கிறது. அட்மிஷனுக்காக எவ்வளவு பாடுபட்டேன் என்பது எனக்குத்தான் தெரியும்” என்று வேதனையோடு சொல்கிறார்.

“இந்தியர்கள் இப்படியா காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொள்வார்கள். பொது இடங்களில் எங்களை ஒருமாதிரியாக பார்க்கிறார்கள்” என்று வருத்தம் கொள்கிறார் ஒரு மாணவி.

இந்தியா முழுவதும் 25 ஆயிரத்திற்கும் அதிகமான ஆப்பிரிக்க மாணவர்கள் தங்கி படிக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் இந்திய பட்டப்படிப்புகளுக்கு மதிப்பு அதிகம். அதுமட்டுமின்றி ஆப்பிரிக்க நாடுகளில் அடிக்கடி வேலை நிறுத்தம் ஏற்படு கிறது. அப்போது கல்வி நிலையங்களும் மூடப்பட்டுவிடும். அதனால்தான் அங்கிருந்து மாணவர்கள் இங்கு வந்து படிக்கிறார்கள்.

காங்கோவைச் சேர்ந்த மசோந்தா கேதாதா ஒலிவியர் என்ற மாணவர் டெல்லியில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். தான்சானியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணை அடித்து, உதைத்து பலர்முன் ஆடைகளை களைந்து அவமானப்படுத்தியிருக்கிறார்கள். “நாங்கள் மானத்தையும், உயிரையும் விடவா கடல் கடந்து இங்கே வந்தோம்” என்று கண்ணீர் வடிக்கிறார்கள், கறுப்பின மக்கள்.

இப்படி ஒருபுறம் ஆப்பிரிக்கர்களை அடித்து துரத்தினாலும், மறுபுறம் இந்தியர்கள் அவர்கள் மீது காதல்வசப்பட்டு கசிந் துருகுவதும் அரங்கேறத்தான் செய்கிறது.

கேமரூனை சேர்ந்த கறுப்பின இளைஞர் லியோனல் ஸோங்கேவும்- இந்தியாவை சேர்ந்த மாணவி பாரதி பூரியும் காதலர்கள். இருவரும் நொய்டாவில் உள்ள சாரதா பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்கள். நிறம் அவர்களை வேறுபடுத்தவில்லை. ஆனால் மனிதர்கள் வேறுபடுத்திப் பார்க்கிறார்கள். ஆப்பிரிக்கரை இந்திய பெண் மனதார நேசிப்பதை பலர் ஏளனப் பார்வையாலேயே விமர்சிக்கிறார்கள். போகும் இடமெல்லாம் அவர் களுக்கு பல வித இன்னல்களை கொடுக்கிறார் கள்.

“கொஞ்சம்கூட நாகரிகமில்லாமல் எங்கள் இருவரையும் உற்றுப் பார்க்கிறார்கள். அது எங்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது. நான் அவரை காதலிப்பதால் என் உறவினர்களும், நண்பர்களும்கூட என்னை அவதூறாகப் பேசுகிறார்கள். ‘உன்னைப் போல வேறு எந்தப் பெண்ணாவது இப்படி ஆப்பிரிக்ககாரனோடு சுற்றிக் கொண்டிருக்கிறாளா? இப்படி ஒரு மாப்பிள்ளையை இங்கு நாங்கள் உனக்காக பேசிமுடித்தால் நீ கல்யாணம் செய்துகொள்வாயா?’ என்று குடும்பத்தினரே என்னிடம் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் உண்மையான காதலோடு இருக்கும் எனக்கு எந்த நிறவேற்றுமையும் தெரியவில்லை.

நாங்கள் இருவரும் வெகுநேரம் செல்போனில் பேசிக் கொண்டிருப்போம். அப்போது அவர், தன்னை எப்படி எல்லாம் கேலியாக பேசுகிறார்கள் என்று மனம் வருந்திச்சொல்வார். தன்னை யாரும் ஒரு மனிதனாகவே மதிப்பதில்லை என்றும் குறைபட்டுக் கொள்வார். அவர் மீது காதல் ஏற்பட அதுவே எனக்கு முதல் காரணமாக இருந்தது. நிறத்தை ஒதுக்கிவிட்டு இதயத்தை நேசிக்க ஆரம்பித்தேன். எங்கள் இருவருக்குள்ளும் எந்த வேற்றுமையுமில்லை. ஆனால் சுற்றி இருப்பவர்கள்தான் எங்களை வேற்றுமையாக பார்க்கிறார்கள். எங்களால் ஒன்றாக ரெயிலில் பயணிக்க முடிவதில்லை. அதனால் ஒரே இடத்திற்கு சென்றாலும் தனித்தனியாக பயணப்படுகிறோம். தொந்தரவு காரணமாக நாங்கள் வெளியே செல்வதையே குறைத்துவிட்டோம்” என்று கூறும் பாரதி, ஒன்றாக செல்வதற்கு மாற்றுவழி ஒன்றை தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர்கள் ஆஸ்திரேலியன் ‘ஸ்போர்ட்ஸ் பைக்’ ஒன்று வாங்கியிருக் கிறார்கள். அதில் ஹெல்மெட் மாட்டிக்கொண்டு பயணிக் கிறார்கள்.

காதலர் லியோனல் தன் கசப்பான அனுபவங்களை சொல்கிறார்:

“பாரதி வேதனைப்படக்கூடாதென்று நான் பல விஷயங்களை மறைத்திருக்கிறேன். நான் எனது நாட்டில் இருந்து கிளம்பி டெல்லி விமான நிலையம் வந்து இறங்குவேன். அங்கு இறங்கியதில் இருந்து என்னை பலரும் பலவிதமாக பார்ப்பார்கள். அருவறுப்பான பொருள் போன்று என்னை பார்ப்பதை நினைத்து முதலில் மிகுந்த வேதனையடைந்தேன். இப்போது பழகிவிட்டது. இதற்கு முன்பு நான் பிரான்சில் படித்தேன். அங்கெல்லாம் இதுபோல அநாகரிகமாக நடந்துகொள்வதில்லை. இந்தியாவில் எனக்கு கிடைத்த ஒரே பொக்கிஷம் பாரதிதான். அவளுக்காக எல்லா வற்றையும் சகித்துக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறேன். படிப்பு முடிந்ததும் இருவரும் திருமணம் செய்துகொண்டு ஆப்பிரிக்கா சென்றுவிடுவோம்” என்கிறார்.

கிரிஸ்டேலி மபேமி, காங்கோவை சேர்ந்தவர். டெல்லியில் உள்ள அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்துக் கொண்டிருக்கிறார். கருப்பாக இருந்தாலும் வசீகர அழகுடன் காட்சியளிப்பார். இவர், 2012-ல் ‘மிஸ் காங்கோ’ அழகியாக தேர்வு செய்யப்பட்டவர். கிரிஸ்டேலி சொல்கிறார்:

“காங்கோ நாட்டு தேசிய அழகியாக தேர்வு செய்யப்பட்டதால் என் நாட்டில் உள்ளவர்கள் எல்லோருக்கும் என்னை தெரியும். என் நாட்டில் என்னை கவுரவமாக நடத்துகிறார்கள். ஆனால் இங்கே நிலைமை தலைகீழாக இருக்கிறது. கல்லூரியில் நிறைய நண்பர்கள் இருந்தாலும் வெளியுலகம் மிகவும் கொடூரமாக இருக்கிறது. இங்கு மகாராணியாகவே இருந்தாலும் கருப்பாக இருந்தால் ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனநிலை கொண்டவர்கள் அதிகம் வாழ்கிறார்கள். நான் படித்துக்கொண்டே பகுதி நேரமாக மாடலிங் செய்யலாம் என்று ஆசைப்பட்டு, அதற்காக ஒரு நிறுவனத்தில் விண்ணப்பித்தேன். அவர்கள் ‘கருப்பு அழகிகளை இந்தியர்கள் விரும்ப மாட்டார்கள்’ என்று கூறிவிட்டார்கள்.

என் நாட்டைவிட்டு இங்கே வந்து தனியாக வாழ்ந்து கொண் டிருக்கிறேன். எனக்கு நிதியாதாரம் தேவைப்படுகிறது. அதற்காகத்தான் பகுதி நேரமாக வேலை பார்க்க விரும்புகிறேன். ஆனால் எனக்கு யாரும் வேலைதர முன்வரவில்லை. இங்கு உயிரோடு இருப்பதே பெரிய விஷயம் என்று நினைக்கிறேன்”

நைஜீரியாவைச் சேர்ந்த மைரிஸ், டெல்லியில் அடுக்குமாடிகுடியிருப்பு பகுதியில் சலூன் நடத்திவருகிறார். “இரண்டு வருடங் களுக்கு முன்பு, நைஜீரியாவில் இருந்த என் சொத்துகளை விற்றுவிட்டு இங்கே வந்து சலூன் தொடங்கினேன். முறைப்படி பயிற்சியும் பெற்றிருக்கிறேன். இங்கு வாழும் ஆப்பிரிக்க நாட்டவர்கள் எங்கள் பாரம்பரிய முறைப்படி சிகையலங்காரம் செய்துகொள்கிறார்கள். அது எங்களின் அடையாளம். எங்கள் நாட்டவர்களுக்கு நான் சிகையலங்காரம் செய்கிறேன். இந்திய வாடிக்கையாளர்களும் வந்துகொண்டிருந்தார்கள்.

ஒருநாள் இளைஞர்கள் கூட்டமாக உள்ளே புகுந்து, உள்ளே உட்கார்ந்திருந்த பெண்ணை கட்டியணைத்து கலாட்டா செய்தனர். நான் கத்தி எடுத்து துரத்திவிட்டேன். காவல் துறையில் புகார் கொடுத்தேன். வன்முறை செய்தவன் அந்தக் கட்டிட உரிமையாளரின் மகன். நடவடிக்கை எடுத்தால் விபரீதம் ஏற்படும் என்று காவல்துறையினர் என்னை சமாதானப்படுத்தினார்கள். திடீரென்று இந்த தொழிலை இழந்துவிட்டு என்னால் நடுத்தெருவில் போய் நிற்க முடியாது. வேறுவழி இல்லாமல் மனதை கல்லாக்கிக் கொண்டு புகாரை வாபஸ் வாங்கினேன். இந்தியர்கள் எங்களை அவமானப்படுத்துவது அவர்கள் தங்களை தாங்களே அவமானப்படுத்திக்கொள்வது போன்றது” என்கிறார், மைரிஸ்.

Next Story