எடப்பாடி பழனிசாமி சசிகலா கூட்டத்தில் இருந்து வெளியே வர முடியுமா? ஒ.பன்னீர்செல்வம் பகிரங்க கேள்வி


எடப்பாடி பழனிசாமி சசிகலா கூட்டத்தில் இருந்து வெளியே வர முடியுமா? ஒ.பன்னீர்செல்வம் பகிரங்க கேள்வி
x
தினத்தந்தி 10 July 2017 4:45 AM IST (Updated: 9 July 2017 11:13 PM IST)
t-max-icont-min-icon

சசிகலா கூட்டத்தில் இருந்து விடுபட்டு வெளியே வர முடியுமா, முடியாதா என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, ஓ.பன்னீர்செல்வம் பகிரங்க கேள்வி எழுப்பி உள்ளார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மற்றும் கழக வளர்ச்சி குறித்த செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் தர்மர் வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

ஜெயலலிதாவின் விசுவாசமிக்க தொண்டர்கள் இங்கு அணி அணியாக வந்து குவிந்துள்ளனர். இதுபோல கூடும் அ.தி.மு.க. தொண்டர்களின் எண்ணிக்கையை பார்த்து நம்மை எதிர்க்கும் கூட்டத்தினர் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். தேசியத்தையும், தெய்வீகத்தையும் இருகண் என போற்றிய முத்துராமலிங்க தேவரும், மாணவர்களையும், இளைஞர்களையும் வழிநடத்திய அப்துல்கலாம் பிறந்த வீரத்தின் விளைநிலமான ராமநாதபுரத்தில் இந்த புனித தர்மயுத்தத்தின் மாபெரும் வெற்றிக்கூட்டம் நடைபெறுவது உண்மையிலேயே ஆட்சியாளர்களுக்கு மிகுந்த அச்சத்தை கொடுக்கும்.

ராமாயண போரில் ராமன் எதிரிகளை வீழ்த்தியதுபோல தர்மயுத்தத்தில் நாமும் எதிரிகளை வீழ்த்துவோம். தீயவர்களின் சூழ்ச்சியால் அயோத்தியில் ராமனின் ஆட்சி எவ்வாறு தடைபட்டதோ அதேபோன்று தற்போது ஜெயலலிதாவின் ஆட்சிக்கு சிறுதடங்கல் வந்துள்ளது. மீண்டும் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றி ஜெயலலிதாவின் ஆட்சியை மலரச்செய்வோம். ராமநாதபுரம் வறட்சி மாவட்டமல்ல. புரட்சி மாவட்டம். தற்போது ஆட்சியில் இருப்பவர்களிடம் அதிகாரமும், பணபலமும் உள்ளது. ஜெயலலிதாவின் தொண்டர்கள் நம்மிடம்தான் உள்ளனர்.

தமிழக மக்களும், எங்கள் பக்கம்தான் இருக்கின்றனர். இது அணிகளை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை குழுவை கலைத்த பின்பும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம் என்று அங்கிருப்பவர்கள் தினமும் தவறான தகவல்களை பரப்பி கொண்டிருக்கின்றனர். தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை பற்றி பல தவறான தகவல்களை பரப்பி கொண்டிருக்கிறார். அவர் பொய் சொல்வதில் அவர் தந்தை கருணாநிதி மாதிரி. இப்போது சட்டமன்றத்தில் ஆளும் கட்சியினர் மு.க. ஸ்டாலினுடன் புதிய கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றனர். சட்டமன்றத்தில் ஸ்டாலினை பார்த்து சிரித்தேன் என்பதை சசிகலா என்மீது பெருங்குற்றமாக கூறினார். ஆனால் இப்போது தி.மு.க.வுடன் ரகசிய கூட்டணி அமைத்து ஆளும் கட்சி செயல்படுகிறது.

ஒரு சலவைத்தொழிலாளியிடம் இருந்த கழுதை அந்த தொழிலாளியின் மகளையே மணமுடித்து கொள்ளலாம் என்று கனவு கண்டதாக ஒரு கதை உண்டு. அதுபோல, ஸ்டாலின் கனவு கண்டு வருகிறார். தான் எப்படியாவது முதல்–அமைச்சர் ஆகிவிடலாம் என்று. ஆனால், அவரின் கனவு ஒருபோதும் பலிக்காது. மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியையும், ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வையும் மக்கள் விரட்டி அடிக்கும் காலம் விரைவில் வரும்.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி வருகிறோம். அவரால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் அதை பற்றி சிந்திக்கவே இல்லை. சசிகலா உள்பட 16 பேரை ஜெயலலிதா கட்சியை விட்டு நீக்கினார். அவர்களில் சசிகலாவை தவிர மற்ற 15 பேரும் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை சேர்த்துக்கொள்ளவில்லை. அவரின் மறைவிற்கு பின்னர் ஜெயலலிதாவின் ஆட்சியை கபளீகரம் செய்ய என்னை பொறுப்பில் இருந்து நீக்கினார்கள். தற்போது அவர்களின் பினாமியாக எடப்பாடி அரசு செயல்பட்டு வருகிறது. கூடிய விரைவில், இந்த ஆட்சிக்கு முடிவு ஏற்படும். அது தமிழக மக்களுக்கு நல்ல முடிவாக அமையும். விரைவில் ஜெயலலிதாவின் நல்லாட்சி அமையும். தி.மு.க. ஒருபோதும் ஆட்சியை பிடிக்க முடியாது.

தமிழக மக்கள் அ.தி.மு.க. மீது மிகுந்த பற்றும் நம்பிக்கையும் வைத்துள்ளார்கள். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சசிகலா கூட்டத்தில் இருந்து விடுபட்டு வெளியே வர முடியுமா, முடியாதா என்பது குறித்து பகிரங்கமாக பதிலளிக்க வேண்டும். அப்போதுதான் அணிகளின் இணைப்பு பற்றி பேச முடியும். தொண்டர்களின் பலத்துடன் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி மலரும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், பி.எச்.பாண்டியன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, செம்மலை, மாபா பாண்டியராஜன் மற்றும் எம்.பி.க்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக பரமக்குடியில் பிரவீனா சேம்பர் பிரிக்ஸ் உரிமையாளர் ரவிச்சந்திரன் தலைமையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் காசிநாததுரை, மோகன், ரமேஷ்கண்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் அருள்முருகன், மணிகண்டபிரபு, வரதராஜன், பரிதி, சதீஷ், சிவராமலிங்கம், கோபிநாத், பரமக்குடி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராமுயாதவ், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வின்சென்ட் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story