டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட பாதுமக்கள் முயற்சி போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு


டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட பாதுமக்கள் முயற்சி போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 July 2017 3:45 AM IST (Updated: 9 July 2017 11:19 PM IST)
t-max-icont-min-icon

மேல்மலையனூரில் டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட முயன்ற பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேல்மலையனூர்,

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் அருகே உள்ளது ஒத்தவாடை தெரு. இங்கு 100–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் மது வாங்கி குடிக்கும் மதுபிரியர்கள் போதை தலைக்கேறியதும் தெரு வழியாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவிகளை கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் தெருவில் இயங்கி வரும் 2 டாஸ்மாக் கடைகளையும் அகற்றக்கோரி தாசில்தார், கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்தனர். ஆனால் டாஸ்மாக் கடைகள் அகற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த ஒத்தவாடை தெரு பொதுமக்கள் நேற்று காலை வன்னியர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமையில் 2 டாஸ்மாக் கடைகளையும் மூட வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பியவாறு அந்த டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையிலன வளத்தி போலீசார் 50–க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, டாஸ்மாக் கடைகளுக்கு முன்னதாக தடுப்பு வேலிகளை அமைத்து, டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட வந்த பொதுமக்களை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது முற்றுகையிட வந்த பொதுமக்களிடம் போலீசார், டாஸ்மாக் கடைகள் அகற்றுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story