1 கோடி செல்லாத ரூபாய் நோட்டுகளுடன் சிக்கிய 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்


1 கோடி செல்லாத ரூபாய் நோட்டுகளுடன் சிக்கிய 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்
x
தினத்தந்தி 10 July 2017 4:00 AM IST (Updated: 9 July 2017 11:33 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரை அடுத்த சோளிபாளையம் பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்திய போது ஒரு காரில் கட்டுக்கட்டாக செல்லாத ரூபாய் நோட்டுகள் இருந்தன.

திருப்பூர்,

திருப்பூரை அடுத்த சோளிபாளையம் பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்திய போது ஒரு காரில் கட்டுக்கட்டாக செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதில் ரூ.77 லட்சத்துக்கு செல்லாத ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், 23 லட்சத்துக்கு பழைய 500 ரூபாய் நோட்டுகளும் இருந்தன.

விசாரணையில் காரில் வந்தவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராமசாமி (வயது 50), செந்தில்குமார் (29), திருச்சியை சேர்ந்த முகமது சுலைமான் (31) என தெரியவந்தது. காரில் வந்த கோவில் என்பவர் தப்பி ஓடி விட்டார். இதையடுத்து ராமசாமி உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்லாத ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் ராமசாமி, செந்தில்குமாருடன் சென்னை சென்று, இப்ராகிம் என்பவரிடம் 10 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அதற்கு பதிலாக 1 கோடி செல்லாத ரூபாய் நோட்டுகளை பெற்றதும், அந்த பணத்தை புதுக்கோட்டையை சேர்ந்த கோவில் என்பவர் மூலமாக திருப்பூரில் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்ற வந்ததும் தெரியவந்தது.

பின்னர் ராமசாமி உள்ளிட்ட 3 பேரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். தப்பி ஓடிய கோவில் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story