நகராட்சிக்கு சொந்தமான சுகாதார வளாகத்தை இலவசமாக மாற்றக் கோரி எம்.எல்.ஏ. வீடு முற்றுகை
உசிலம்பட்டி– கீழப்புதூரில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான சுகாதார வளாகத்தை பொது பயன்பாட்டிற்காக இலவசமாக மாற்றித் தரக்கோரி உசிலம்பட்டி எம்.எல்.ஏ. வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்னர்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டியில் உள்ள கீழப்புதூரில் நகராட்சி சொந்தமான சுகாதார வளாகம் உள்ளது. முன்பு இந்த வளாகம் இலவசமாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சுகாதார வளாகம் கட்டணம் வசூலிக்கும் விதமாக மாற்றப்பட்டு, அதற்கான டெண்டர் நகராட்சி மூலம் விடப்பட்டது.
இதையறிந்து 16,17,18 ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள், கட்டண முறையை அகற்றி, சுகாதார வளாகத்தை பொது பயன்பாட்டிற்கு இலவசமாக மாற்றித்தர அனுமதிக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தனர். ஆனால் அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், திடீரென கட்டணம் அறிவித்ததை தொடர்ந்து, நேற்று காலை உசிலம்பட்டி எம்.எல்.ஏ. நீதிபதி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மேலும் தங்களது பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதால், அதை சரிசெய்து முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர். அதைத்தொடர்ந்து பேராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் எம்.எல்.ஏ நீதிபதி பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் கீழப்புதூரில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான சுகாதார வளாகத்தை, பொது பயன்பாட்டிற்காக இலவசமாக மாற்றிட கலெக்டரிடம் பேசி அதற்கான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என்றார்.
மேலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, அந்த பகுதியில் 2 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். அதைத்தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.