கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட செம்மரக்கட்டைகள் சிக்கின
கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட செம்மரக்கட்டைகள் சிக்கின.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே சத்யவேடு– கவரைப்பேட்டை சாலையில் அய்யர்கண்டிகை கிராமத்தில் நேற்று அதிகாலை கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மேற்பார்வையில் கவரைப்பேட்டை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆந்திர மாநிலம் சத்யவேடு பகுதியில் இருந்து அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்று போலீசாரை கண்டதும் சற்று தொலைவாக நிறுத்தப்பட்டது. காரின் அருகே ஒரு மோட்டார் சைக்கிளில் போலீசாரை நோட்டமிட்டவாறு 2 பேர் அமர்ந்து இருந்தனர்.
இதை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார், காரின் அருகில் விரைந்து சென்றனர். அப்போது காரில் இருந்து 2 பேர் இறங்கி தப்பி ஓடினர். மேலும் அங்கு மோட்டார் சைக்கிளுடன் நோட்டம் இட்டவாறு காத்திருந்த 2 பேரும் மின்னல் வேகத்தில் சென்று விட்டனர். சொகுசு காரின் அருகில் போலீசார் சென்று பார்த்த போது அதில் ஒரு டன் எடை கொண்ட 13 செம்மரக்கட்டைகள் கடத்தி வருவது தெரியவந்தது.
கடத்தி வரப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. பிடிபட்ட செம்மரக்கட்டைகள் கும்மிடிப்பூண்டி வனசரகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.