‘‘மக்கள் பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் ஏற்படும் விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு’’


‘‘மக்கள் பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் ஏற்படும் விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு’’
x
தினத்தந்தி 10 July 2017 4:15 AM IST (Updated: 10 July 2017 2:31 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் ஏற்படும் விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு என்று அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு கவர்னர் கிரண்பெடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி,

வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் கவர்னர் கிரண்பெடி புதுச்சேரியில் இருக்கும்போது களஆய்வுப்பணி மேற்கொண்டு வருகிறார். சனிக்கிழமை தோறும் சுகாதாரப்பணிகளில் ஈடுபடுவதுடன் மாணவ-மாணவிகளுடன் சேர்ந்து தூய்மைப்பணி குறித்து விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் நேரடியாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் தரும் புகார்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தி, குறைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் மின்சார தகன மையம் உள்ளது. இதில் உடல்களை தகனம் செய்தால் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க முடியும். விறகு, வைக்கோல் ஆகியவைகளை கொண்டு இறந்தவர்களின் உடலை தகனம் செய்தால் அதிக கட்டணம் வசூலிக்கலாம் என்பதால் தகனம் செய்யும் எந்திரத்தை பழுதாக்கி வைத்துவிட்டு, பணம் வசூலித்து வருவதாக கவர்னர் மாளிகைக்கு புகார்கள் வந்தன.

இதையொட்டி கவர்னர் கிரண்பெடி நேற்று காலை கருவடிக்குப்பம் சுடுகாட்டிற்குச் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அங்கு மின்சாரம் மற்றும் எரிவாயுவால் உடலை தகனம் செய்யும் எந்திரங்கள் இயக்கப்படாமல் இருப்பதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார். அப்போது உழவர்கரை நகராட்சி உதவி பொறியாளர் ராமநாதன், ‘மின் தகனத்திற்கு ரூ.850 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மின்தகன மைய எந்திரம் பழுதானது குறித்து அரசுக்கு தெரிவித்து இருக்கிறோம். அதனை சீரமைக்க ரூ.23லட்சம் செலவாகும். அதனை விரைவில் சீர் செய்து தருகிறோம் என்று அரசு உறுதி அளித்துள்ளது’ என்றார்.

கவர்னர் கிரண்பெடி அவரிடம், “மின் தகன எந்திரத்திற்கு ஓராண்டு பராமரிப்பு காண்டிராக்ட் ஏன் செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் இந்த பிரச்சினையை சரி செய்திருக்கலாம். மேலும் எந்திரத்தை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுங்கள். சுடுகாட்டில் தகனம் செய்ய கட்டணம் எவ்வளவு என்பதை பலகையில் எழுதி வைக்க வேண்டும். தினமும் எத்தனை சடலம் வருகிறது, எவ்வளவு கட்டணம் வசூலிக்கின்றீர்கள் என்று வரவு-செலவு கணக்கில் பதிவு செய்ய வேண்டும். இதனை கம்ப்யூட்டர் மயமாக்க வேண்டும்” என்று கூறினார்.

பின்னர் கவர்னர் கிரண்பெடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கும், தகனம் செய்வதற்கும் முறையான பதிவுகள் இருக்க வேண்டும். பதிவுகள் சரியாக இல்லை என்றால் தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே எத்தனை உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றன, தகனம் செய்யப்படுகின்றன என்ற தகவல்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

நாள் தோறும் புதுச்சேரி மக்களிடம் இருந்து எனக்கு பல்வேறு புகார்கள் வருகின்றன. அதில் சில புகார்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகிறேன். சில முக்கிய புகார்களை நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறேன்.

புதுச்சேரி மாநில அரசு அதிகாரிகள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பொதுமக்களின் கோரிக்கைகளை தீர்க்க முன்வரவேண்டும். பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வரவில்லை என்றால் இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு மக்கள் பிரதிநிதிகளே பொறுப்பு. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story