மர்ம காய்ச்சல் பரவுவதை தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது


மர்ம காய்ச்சல் பரவுவதை தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 10 July 2017 4:00 AM IST (Updated: 10 July 2017 3:00 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் பரவுவதை தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் கதிரவன் தலைமையில் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சி பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். இதில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கதிரவன் பேசியதாவது:-

மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சி பகுதிகளில் காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் வீடுகளில் குடிநீர் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். வீடுகளின் அருகில் டயர், உரல், சிரட்டை, தென்னை மட்டை, பிளாஸ்டிக் பொருட்கள், பயனற்ற பொருட்கள் இருந்தால் உடனே அப்புறப்படுத்த வேண்டும்.

காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து காய்ச்சலின் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும். அரசு தலைமை மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்படும் நிலவேம்பு கசாயத்தை குடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் காய்ச்சல் ஒழிப்பு நடவடிக்கைக்கு என மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. காய்ச்சல் குறித்த அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண் 04343 - 233009 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் நரசிம்மன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் லட்சுமணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story