வாலிபர் வெட்டிக்கொலை: போலீசார் குவிப்பு குற்றவாளிகளை பிடிக்க 3 போலீஸ் தனிப்படைகள்


வாலிபர் வெட்டிக்கொலை: போலீசார் குவிப்பு குற்றவாளிகளை பிடிக்க 3 போலீஸ் தனிப்படைகள்
x
தினத்தந்தி 10 July 2017 4:15 AM IST (Updated: 10 July 2017 3:15 AM IST)
t-max-icont-min-icon

‘பழிக்குப்பழியாக வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதால், ஸ்ரீவைகுண்டம் அருகே கிராமத்தில் பதற்றம் நிலவுகிறது. அந்த கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கொலை கும்பலை பிடிக்க 3 போலீஸ் தனிப்படைகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கயத்தாறு,

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சண்முகையா மகன் அழகு கிருஷ்ணன் (வயது 30), வெள்ளப்பாண்டி மகன் ஆனந்த் (28), சுப்பையா (38). இவர்கள் உறவினர்கள். இவர்கள், சில மாதங்களாக சீவலப்பேரி அருகேயுள்ள அலங்காரபேரியில் தங்கியிருந்தனர்.


 கடந்த 7–ந் தேதி இரவு அலங்காரபேரியிலிருந்து கங்கைகொண்டான் வடகரை விலக்கு பகுதியில் நடந்த கோவில் கொடை விழாவில் கலந்து கொண்டனர். பின்னர், கடந்த 8–ந் தேதி அதிகாலையில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் அலங்காரபேரிக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். கங்கைகொண்டான் நகருக்கு வெளியே சென்றபோது, பின்னால் வந்த கார் திடீரென்று மோட்டார் சைக்கிளின் மீது வேகமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 3 பேரும் சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.


கண் இமைக்கும் நேரத்தில் அந்த காரில் இருந்து ஆயுதங்களுடன் இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல், காயங்களுடன் சாலையில் கிடந்த அழகு கிருஷ்ணன், ஆனந்த், சுப்பையா ஆகிய 3 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். பின்னர் அவர்கள் காரில் ஏறி தப்பி சென்றனர். இதில் சம்பவ இடத்திலேயே அழகு கிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் பலியானார். மற்ற 2 பேரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் சிகிச்சை பெறும் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


கொலை செய்யப்பட்ட அழகு கிருஷ்ணனின் உடல் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப்பட்டு நேற்று முன்தினம் மாலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருடைய உடல் போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புடன் கால்வாய் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவருடைய உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன.


இந்த சம்பவம் குறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் ‘தூத்துக்குடி மாவட்டம் கால்வாய் கிராமத்தில் நடந்த வாலிபர் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை சம்பவம் நடந்தது தெரிய வந்தது. இதில், கால்வாய் கிராமத்தை சேர்ந்த சேர்ந்த மணிகண்டன், மாசானம் உள்ளிட்ட 5 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த கும்பலை பிடிக்க, தாழையூத்து போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னரசு தலைமையில் 3 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.


அழகுகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டதால், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கால்வாய் கிராமத்தில் பதற்றம் நிலவுகிறது. கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இரவு, பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் கும்பலின் குடும்பத்தினர் அனைவரும் வெளியூருக்கு சென்று விட்டனர். அவர்களுடைய வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story