சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகம் முற்றுகை காலிகுடங்களுடன் பெண்கள் போராட்டம்


சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகம் முற்றுகை காலிகுடங்களுடன் பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 11 July 2017 4:15 AM IST (Updated: 11 July 2017 12:06 AM IST)
t-max-icont-min-icon

சென்னை நகர் முழுவதும் குடிநீர் பிரச்சினை நிலவுகிறது. தண்ணீருக்காக பெண்கள் காலிகுடங்களுடன் அலையும் பரிதாப நிலை இருந்து வருகிறது. தண்ணீருக்காக நகரின் ஏதேனும் ஒரு பகுதியில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் அன்றாடம் அரங்கேறி வருகின்றன.

சென்னை,

இந்தநிலையில் சிந்தாதிரிப்பேட்டை பகுதி நெடுஞ்செழியன் நகர், பஜார் தெரு, ரிச்சி தெரு, பம்பிங் ஸ்டேசன் தெரு உள்பட பகுதிகளை சேர்ந்த பெண்கள் காலிகுடங்களுடன் சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ள சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்துக்கு நேற்று காலை வந்தனர்.
நுழைவுவாயில் முன்பு காலிகுடங்களுடன் ‘தண்ணீர் வேண்டும்... தண்ணீர் வேண்டும்...’ என்று கோஷங்கள் எழுப்பியபடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் குடிநீர் வாரிய அதிகாரிகளும், போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் குடிநீர் லாரி வரவழைக்கப்பட்டு அங்கேயே தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. போராட்டம் நடத்திய அரை மணி நேரத்தில் தண்ணீர் கிடைத்த மகிழ்ச்சியில் பெண்கள் கலைந்து சென்றனர்.

Next Story