சுகாதார சீர்கேடு சப்–கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி நந்தனார் காலனி பொதுமக்கள் சப்–கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி நகராட்சி 10–வது வார்டுக்கு உட்பட்ட நந்தனார் காலனியில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் சாக்கடை கழிவுநீரால் சுகாதார சீர்கேடு நிலவி வருவதாக கூறி அந்த பகுதி பொதுமக்கள் சப்–கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் அங்கேயே தரையில் அமர்ந்து இருந்தனர். தொடர்ந்து சப்–கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–
நந்தனார் காலனியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த மாதம் நகராட்சி அதிகாரிகள் சாக்கடை கால்வாயில் உள்ள சிமெண்டால் ஆன சிலாப்புகளை அகற்றினார்கள். இதனால் கழிவுநீர் ரோட்டில் ஓடுகிறது. தற்போது வரை எந்தவித பராமரிப்பு பணியும் நடைபெறவில்லை. மேலும் பொதுக்கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சாக்கடை கால்வாயினை உடனடியாக சரிசெய்து தர வேண்டும். மேலும் குடிநீர் குழாய் பதிய தோண்டப்பட்ட குழிகளை சரிசெய்து சாலை வசதி அமைத்து கொடுக்க வேண்டும். அருகில் உள்ள குப்பை தொட்டியை வேறு இடத்திற்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள ஒடையகுளம் பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–
பொள்ளாச்சி தாலுகா ஒடையளகுளம் கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 250–க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் இதுவரை முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை பெற முடியவில்லை. இதனால் பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்கும் ஏழை, எளிய மக்களால் சிகிச்சை பெற முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே உரிய நடவடிக்கை எடுத்து மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கோவில்பாளையம் சேரன் நகர் பொதுமக்கள் கொடுத்த மனுவில், சேரன் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஒரு ஆண்டாக சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. குப்பைகளை ஆங்காங்கே கொட்டி தீவைப்பதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. குப்பைகளை முறையாக அகற்றாததால் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இரவு நேரங்களில் பெரும்பாலான தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. எனவே குப்பைகளை அகற்றவும், சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.