முறையாக குடிநீர் வழங்கக் கோரி உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், முறையாக குடிநீர் வழங்கக் கோரி கிராம மக்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே உள்ளது நக்கலப்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்டது மருதம்பட்டி கிராமம். இங்குள்ள மக்களுக்கு கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என்றும், தற்போது முற்றிலும் குடிநீர் வினியோகம் தடைப்பட்டு விட்டது என்றும் கிராம மக்கள் புகார் கூறி வந்தனர். மேலும் இதுகுறித்து அவர்கள் பலமுறை உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த கிராம மக்கள் குடிநீருக்காக பல இடங்களில் அலைந்து அவதிப்பட்டனர். இருப்பினும் அவர்களுக்கு அத்தியாவசிய தேவைக்கு கூட தண்ணீர் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இதுபற்றி கண்டு கொள்ளவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த மருதம்பட்டி கிராம மக்கள் நேற்று காலிக்குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு ஊசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தினர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் குறைகள் சரி செய்யப்பட்டு, முறையாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.