ஆம்பூர் அருகே குடிநீர் கேட்டு அரசு பஸ்சை கிராம மக்கள் சிறைபிடிப்பு
ஆம்பூர் அருகே கதவாளம் ஊராட்சி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் குடிநீர் கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. குடிநீர் வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
ஆம்பூர்,
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் கதவாளம் ஊராட்சி உள்ளது. ஆம்பூர் அருகே உள்ள இந்த ஊரில் கடந்த பல மாதங்களாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குடிநீர் எடுப்பதற்காக கிராமத்தை சேர்ந்த பெண்கள் நீண்ட தூரம் குடங்களுடன் சென்று தண்ணீரை எடுத்து வருகின்றனர்.
அதேநேரத்தில் வீராங்குப்பம், குமாரமங்கலம், தட்டப்பாறை, மோதகபல்லி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு கதவாளம் பகுதியில்தான் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் எடுத்துச்செல்லப்படுகிறது. ஆனால் உள்ளூரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்காததால் கொதிப்படைந்த கதவாளம் கிராம பொதுமக்கள் நேற்று காலி குடங்களுடன் ஆம்பூர் – அரங்கல்துருவம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு பஸ் சிறைபிடிப்புஅப்போது அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ்சையும் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த உமராபாத் போலீசாரும், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். போராட்டம் காரணமாக சிறைபிடிக்கப்பட்ட பஸ் 2 மணி நேரமாக அங்கேயே நின்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றதையடுத்து பஸ் விடுவிக்கப்பட்டது.
மற்றொரு ஊரில் மறியல்இதேபோல் குடியாத்தம் ஒன்றியம் செருவங்கி ஊராட்சி கார்த்திகேயபுரம் கிராமத்தின் ஒரு பகுதிக்கு கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. ஆழ்துளை கிணறுகளில் நீர்ஆதாரம் இருந்தும் மோட்டார்கள் பழுதாகியுள்ளன. ஆனால் அதனை செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடிநீர் வழங்கக்கோரி நேற்று காலையில் குடியாத்தம் – ஆம்பூர் சாலையில் கார்த்திகேயபுரம் கிராமத்தில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலால் இரு புறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.
இது குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், கிராம நிர்வாக அலுவலர் தரணி உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக சுமார் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.