தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேச்சு


தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 11 July 2017 4:15 AM IST (Updated: 11 July 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

சரியான தலைமை இல்லாததால் தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று இண்டூர் பஸ்நிலைய திறப்பு விழாவில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.

பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் இண்டூரில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் சாந்தமூர்த்தி தலைமை தாங்கினார். இண்டூர் வளர்ச்சி மன்ற செயலாளர் அப்புணு வரவேற்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், உதவி கலெக்டர் ராமமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமரவேல், ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தர்மபுரி எம்.பி. டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு புதிய பஸ்நிலையத்தை அந்த பகுதியில் நின்றிருந்த பெண் தொழிலாளியை வைத்து திறந்து வைத்தார். பின்னர் புதிய பஸ்நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கத்தை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்து கல்வெட்டை திறந்து வைத்தார்.

விழாவில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசியதாவது:-


தர்மபுரி மாவட்டத்தில் 67 அரசு மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதற்கு மூலகாரணமாக இருந்தவர் டாக்டர் ராமதாஸ். பா.ம.க. நடத்திய தொடர் போராட்டங்களே மதுக்கடைகளை மூட முக்கிய காரணம். 50 ஆண்டுகள் ஆகியும் தர்மபுரி மாவட்டம் தொழில் வளர்ச்சி பெறவில்லை. இந்த மாவட்டத்தில் தொழில் வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் கிடப்பில் உள்ளன. தர்மபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வர தொடர்ந்து போராடுவோம்.

தர்மபுரி மாவட்டத்தில் ரூ.130 கோடி மதிப்பிலான எண்ணேகொல்புதூர் திட்டம் உள்பட 10 நீர்பாசன திட்டங்களை நடைமுறைப்படுத்தினால் இந்த மாவட்டத்தில் விவசாயம் செழிக்கும். மத்திய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதி தர்மபுரி பாராளுமன்ற தொகுதியின் வளர்ச்சிக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய தயாராக உள்ளார். அதற்கான திட்ட முன்மொழிவுகளை தமிழக அரசு, மத்திய அரசுக்கு அனுப்பினால் தர்மபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை பெற்று தர நான் தயாராக உள்ளேன்.


தமிழகத்தில் சரியான தலைமையில்லாத ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது நமது ஆட்சி இங்கு உருவாகும். தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி அமையும்போது 3 மாதங்களில் தர்மபுரி மாவட்டத்தின் அனைத்து வளர்ச்சி திட்டங்களும் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாநில துணை தலைவர் பாடி செல்வம், மாவட்ட செயலாளர்கள் சண்முகம், இமயவர்மன், மாவட்ட தலைவர் மதியழகன், மாநில இளைஞரணி துணை செயலாளர் முருகசாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் வெங்கடேசன், முன்னாள் மாவட்ட செயலாளர் பெரியசாமி, முன்னாள் எம்.பி. பாரிமோகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் முருகன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story