அவசர சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


அவசர சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 July 2017 3:45 AM IST (Updated: 11 July 2017 2:41 AM IST)
t-max-icont-min-icon

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பான அவசர சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர்,

தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி முன்பு தமிழக அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை கிளை தலைவர் சாத்தையன் தலைமை தாங்கினார். செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தை அகில இந்திய பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பு துணைத்தலைவர் அறிவுடைநம்பி தொடங்கி வைத்து பேசினார்.


ஆர்ப்பாட்டம் குறித்து பேராசிரியர் அறிவுடைநம்பி கூறுகையில், “பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தேர்வு முறையில் தற்போது கல்லூரி ஆசிரியர்கள் இடம்பெறவில்லை. முன்பு செனட் உறுப்பினர் என்ற அடிப்படையில் கல்லூரி ஆசிரியர்கள் தேர்வு குழுவில் இடம்பெற்றனர். ஆனால் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள அவசர சட்டத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டு பேராசிரியர்களாக பணிபுரிபவர்கள், முன்னாள் துணைவேந்தர், அரசு முதன்மை செயலாளர் ஆகியோர் கொண்ட குழுவினர் தான் தேர்வு செய்யும். ஆனால் முன்பு துணைவேந்தர்களாக கல்லூரி முதல்வர்கள், கல்லூரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது கொண்டுவரப்பட்டுள்ள அவசர சட்டத்தால் கல்லூரி பேராசிரியர்கள் யாரும் துணைவேந்தர்களாக ஆக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த அவசர சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், துணைவேந்தர் நியமனத்தில் கல்லூரி ஆசிரியர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது”என்றார்.

முடிவில் பொருளாளர் வரதராஜன் நன்றி கூறினார். 

Next Story