மன்னிப்பு கேட்கும் அளவுக்கு பிரஜ்வல் எந்த தவறும் செய்யவில்லை குமாரசாமி பேட்டி


மன்னிப்பு கேட்கும் அளவுக்கு பிரஜ்வல் எந்த தவறும் செய்யவில்லை குமாரசாமி பேட்டி
x
தினத்தந்தி 11 July 2017 3:07 AM IST (Updated: 11 July 2017 3:07 AM IST)
t-max-icont-min-icon

சூட்கேஸ் கலாசாரம் பற்றிய விவகாரத்தில் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு பிரஜ்வல் எந்த தவறும் செய்யவில்லை என்று குமாரசாமி கூறினார்.

பெங்களூரு

தேவேகவுடாவின் பேரனும், முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல், மைசூரு மாவட்டம் உன்சூரில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசினார். அவர் பேசும்போது, “ஜனதா தளம்(எஸ்) கட்சியில் ஒரு நோய் உள்ளது. அங்கு சூட்கேஸ் கலாசாரம் இருக்கிறது. சூட்கேஸ் கொடுப்பவர்களுக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்படுகிறது. உண்மையான நிர்வாகிகள் கடைசி வரிசையில் அமர்த்தப்படுகிறார்கள்“ என்று பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார்.

இது ஜனதா தளம்(எஸ்) கட்சியில் மேல்மட்ட தலைவர்களுக்கு நெருக்கடியான நிலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த தேவேகவுடா, தனது பேரனாக இருந்தாலும், பிரஜ்வல் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பேன் என்று அறிவித்தார். மேலும் தேவேகவுடாவை பிரஜ்வல் நேரில் சந்தித்து, தான் கட்சிக்கு எதிராக கூறிய கருத்துக்காக மன்னிப்பு கேட்டார். இதை தேவேகவுடா ஏற்றுக் கொண்டார். மேலும், குமாரசாமியிடமும் மன்னிப்பு கேட்கும்படி பிரஜ்வலுக்கு தேவேகவுடாவுக்கு கட்டளையிட்டார். இதனால் கடும் அதிருப்தியில் இருந்த குமாரசாமி இதுபற்றி கருத்து எதுவும் கூறாமல் அமைதியாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் குமாரசாமி இதுபற்றி நேற்று முதல் முறையாக கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறுகையில், “பிரஜ்வல் எங்கள் கட்சி பற்றி கருத்து கூறியதாக வெளியான செய்தியை பத்திரிகைகளில் பார்த்தேன். தேவேகவுடாவிடம் அவர் மன்னிப்பு கேட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் என்னிடம் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு பிரஜ்வல் எந்த தவறும் செய்யவில்லை. பிரஜ்வல் எனது பெயரை சொல்லி அவர் பேசவில்லை. அதனால் அவர் எதற்காக என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்?. மேலும் அவர் கூறியபடி சூட்கேஸ் கலாசாரத்தில் ஈடுபட்டவர்கள் எங்கள் கட்சியை விட்டு வெளியே சென்றுவிட்டனர்(இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள 7 எம்.எல்.ஏ.க்களை மனதில் வைத்து இதை அவர் கூறினார்). இவர்களை தான் பிரஜ்வல் அவ்வாறு கூறி இருப்பார். இப்போது எங்கள் கட்சியில் சூட்கேஸ் கலாசாரம் இல்லை“ என்றார்.

குமாரசாமியின் இந்த கருத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அவர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “ஜனதா தளம்(எஸ்) கட்சியில் சூட்கேஸ் கலாசாரம் இருப்பதாக தேவேகவுடா குடும்பத்தை சேர்ந்த ஒருவரே கூறி இருக்கிறார். இதை தேவேகவுடா ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் குமாரசாமி இதை ஏற்க மறுப்பது ஏன்?. அவர் எங்கள் மீது ஏன் வீண் பழி போடுகிறார். எல்லா கட்சியிலும் சூட்கேஸ் கலாசாரம் உள்ளது. சூட்கேஸ் வாங்காமல் யாரும் கட்சியை நடத்த முடியாது. இதை குமாரசாமி ஒப்புக்கொள்ள வேண்டும். இது மக்களுக்கு நன்றாக தெரியும்“ என்றார்.


Next Story