கவர்னரின் நெருக்கடியை மக்கள் சக்தியால் முறியடிப்போம் அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு


கவர்னரின் நெருக்கடியை மக்கள் சக்தியால் முறியடிப்போம் அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு
x
தினத்தந்தி 11 July 2017 4:00 AM IST (Updated: 11 July 2017 3:58 AM IST)
t-max-icont-min-icon

கவர்னர் கொடுக்கும் நெருக்கடியை மக்கள் சக்தியால் முறியடிப்போம் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

வில்லியனூர்,

புதுவை சட்டசபைக்கு நியமன எம்.எல்.ஏ.க்களாக பா.ஜ.க.வை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை மத்திய அரசு தன்னிச்சயை£க நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கவர்னர் கிரண்பெடியை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதையொட்டி ஊசுடு தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் பத்துக்கண்ணு ஐந்து ரோடு சந்திப்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான் தலைமை தாங்கினார். முதல்–அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் மாநில தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:–

மக்கள் சக்தியால் முறியடிப்போம்

டெல்லி மக்களால் புறக்கணிக்கப்பட்ட கிரண்பெடி, லாஸ்பேட்டை தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு டெபாசிட் கூட வாங்காத சாமிநாதன் ஆகியோர் மக்கள் செல்வாக்கை இழந்த என்.ஆர்.காங்கிரசுடன் இணைந்து புதுவையில் பெரும்பான்மை பலத்துடன், மக்கள் ஆதரவுடன் ஆட்சி நடத்தும் காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் சதி செய்து வருகிறார்கள்.

குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. யாரை இழுக்கலாம் என்று பார்க்கும் எதிர்க்கட்சியினர், தங்களிடம் எத்தனை பேர் இருக்கிறார்கள்? என்பதை முதலில் பார்க்கவேண்டும். கவர்னர் மறைமுகமாக கொடுக்கும் நெருக்கடியை மக்கள் சக்தி கொண்டு முறியடிப்போம்.

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்

காங்கிரஸ்– தி.மு.க. கூட்டணி ஆட்சி செயல்படுத்தும் நலத்திட்டங்களுக்கு கவர்னர் கிரண்பெடி தடையாக இருக்கிறார். இதன் மூலம் அந்த திட்டங்களை தாமதப்படுத்தலாமே தவிர முழுமையாக தடுத்துவிட முடியாது. முதல்–அமைச்சரின் தீவிர முயற்சியால் ஸ்மார்ட் திட்டத்தின் மூலம் புதுவை அரசுக்கு 1,550 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

மேலும் இந்த ஆண்டுக்குள் 4,500 வீடுகள் கட்டி பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நேரத்தில் நாங்கள் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.

எம்.எல்.ஏ.க்களை தக்கவைக்கும் முயற்சி

ஆர்ப்பாட்டத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசுகையில், ‘புதுவை மக்களுக்கு தெரியாதவர்களை மத்திய அரசு நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்துள்ளது. அவர்கள் செல்லாத காசுகள். ஏனென்றால் அவர்களுக்கு ஓட்டுரிமை கிடையாது. அதை வைத்துக்கொண்டு அரசை கவிழ்க்க புரளியை கிளப்பி விடுகிறார்கள். அவர்களிடம் (என்.ஆர்.காங்கிரஸ்) உள்ள எம்.எல்.ஏ.க்களை கட்சி மாறாமல் தக்க வைப்பதற்காக இதுபோன்ற புரளியை கிளப்பி விட்டுள்ளனர்’ என்று கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் அரசு கொறடா அனந்தராமன், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாலன், விஜயவேணி மற்றும் காங்கிரஸ், தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.



Next Story