தென்பெண்ணை ஆற்றில் மணல் எடுத்துச்சென்ற மாட்டு வண்டிகள் சிறைபிடிப்பு
புதுவை மாநிலம் பாகூரை அடுத்த சோரியாங்குப்பம் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையும் மீறி தொடர்ந்து மணல் கொள்ளை நடந்து வருகிறது. இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
பாகூர்,
இதனால் அதிக விலை கொடுத்து மணல் வாங்கி கட்டுமான பணிகளை முடிக்க முடியாமல் நடுத்தர, ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக மணல் பிரச்சினையால் அரசின் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள் முழுமை பெறாமல் உள்ளது.
மாட்டு வண்டிகள் சிறைபிடிப்புஇந்த நிலையில் நேற்று காலை தென்பெண்ணை ஆற்றில் மணல் எடுத்துக்கொண்டு அபிஷேகப்பாக்கம் வழியாக 30–க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் சென்றன. இந்த வண்டிகளை அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சிறைபிடித்து, மணலை தங்களுக்கு தரவேண்டும் என்றனர். ஆனால், மாட்டு வண்டிக்காரர்கள், ஒரு வண்டி மணல் ரூ. 2,500–க்குத்தான் தருவோம் என்று கூறினர்.
இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, மாட்டு வண்டிக்காரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, நியாயமான விலையில் மணலை தரவில்லை என்றால், இந்த வழியாக இனி வரும் நாட்களில் எந்த மாட்டு வண்டிகளும் மணல் ஏற்றிச்செல்ல முடியாது என்று கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து கிராம மக்கள் கேட்ட விலைக்கே மணலை விற்பனை செய்து விட்டு, மாட்டு வண்டிக்காரர்கள் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.