தேவூர் அருகே மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலுக்கு முயற்சி
தேவூர் அருகே மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேவூர்,
தேவூர் அருகே அம்மாபாளையம் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக மதுக்கடை செயல்பட்டு வந்தது. இந்த மதுக்கடையை அகற்றி பாலிருச்சம்பாளையம் பகுதியில் மதுக்கடை அமைக்க கடந்த 5 மாதங்களுக்கு முன்பு முயற்சித்தனர். அப்போது பாலிருச்சம்பாளையம், சுண்ணாம்புகரட்டூர், வெள்ளைபாளையம், காவேரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 200–க்கும் மேற்பட்டோர் திரண்டு எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் மதுக்கடை அமைப்பதை கைவிட்டு வேறு இடம் பார்த்து வந்தனர்.
இதையடுத்து கோனேரிப்பட்டி கிராமம் சோளக்கவுண்டனூர் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் மதுக்கடை அமைக்க முயற்சித்தனர். அப்போது சோளக்கவுண்டனூர்,பெரமாச்சிபாளையம், குண்டன் தெரு, ரெட்டிபாளையம், சென்றாயனூர் உள்ளிட்ட் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு மதுக்கடை அமைக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
சாலைமறியலுக்கு முயற்சிஇந்தநிலையில் அதே பகுதியில் நேற்று மதுக்கடை அமைக்க அதிகாரிகள் சென்றனர். அவர்களுடன் போலீசாரும் சென்றனர். அப்போது சோளக்கவுண்டனூர் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்பட பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சாலைமறியல் செய்ய முயற்சி செய்தனர். இதையடுத்து தேவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்–இன்ஸ்பெக்டர் பிரகாஷ், அப்பாதுரை உள்ளிட்ட போலீசார் அங்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து அங்கு மதுக்கடை அமைக்கும் முயற்சி கைவிடப்பட்டது.