கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துகோன் சிலைக்கு மாலை அணிவிப்பு
வீரன் அழகுமுத்துகோன் ஜெயந்தி விழாவையொட்டி, கட்டாலங்குளத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கோவில்பட்டி,
சுதந்திர போராட்ட தியாகி வீரன் அழகுமுத்துகோனின் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவர் பிறந்த ஊரான கயத்தாறு தாலுகா கட்டாலங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துகோன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ, 9 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு சுழல்நிதியாக தலா ரூ.10 ஆயிரமும், 3 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தலா ரூ.1 லட்சமும் கடனாக வழங்கினார். மேலும் 25 பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு, 11 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, 6 பயனாளிகளுக்கு பசுமை வீடு திட்டத்தில் வீடு கட்ட அனுமதி வழங்கப்பட்டது.
கலந்து கொண்டவர்கள்விழாவில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அனிதா, கயத்தாறு தாசில்தார் முருகானந்தம், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான், கயத்தாறு யூனியன் ஆணையாளர்கள் தங்கவேல், வேலுமயில், மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், கோவில்பட்டி நகர செயலாளர் விஜய பாண்டியன், நிலவள வங்கி தலைவர் கணபதி பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு கோகுலம் அறக்கட்டளை தலைவர் மூர்த்தி யாதவ் தலைமையில், வீரன் அழகுமுத்துகோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அறக்கட்டளை துணை தலைவர் சுரேஷ், மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.