ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு பஸ்–லாரி மோதல்; 18 பேர் படுகாயம்


ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு பஸ்–லாரி மோதல்; 18 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 12 July 2017 3:30 AM IST (Updated: 12 July 2017 12:11 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று காலை அரசு பஸ் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர், நடத்துனர் உள்பட 18 பேர் காயமடைந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் இருந்து மதுரை நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சில் டிரைவராக மதுரை திருநகரைச் சேர்ந்த கழுகாசலம்(வயது 55) என்பவரும், நடத்துனராக பேரையூர் உப்பளநத்தத்தைச் சேர்ந்த ராமநாதன்(28) என்பவரும் இருந்தனர். இந்த பஸ் நேற்று காலை 6 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சென்று கொண்டிருந்தது.

நகரில் உள்ள ஆர்.சி. தேவாலய சந்திப்பு அருகே சாலையின் இடப்புறமாக வந்துக் கொண்டிருந்த பஸ், ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலையில் திரும்ப முயன்றது. அப்போது எதிரே வந்த லாரி, அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் அரசு பஸ்சின் முன்பகுதியும், லாரியின் முன்பகுதி நொறுங்கி போனது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பஸ்சின் டிரைவர் உயிர் தப்பினார். மேலும் இந்த விபத்தில் நடத்துனர், டிரைவர், பயணிகள் என 18 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் விபத்து குறித்து 108 ஆம்புலன்சுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்த பயணிகளையும், நடத்துனர், டிரைவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து நடத்துனர் ராமநாதன் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், லாரியை ஓட்டி வந்த திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த டிரைவர் சுரேஷ்குமார்(27) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story