மரக்காணம் அருகே டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்


மரக்காணம் அருகே டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 12 July 2017 3:45 AM IST (Updated: 12 July 2017 12:44 AM IST)
t-max-icont-min-icon

மரக்காணம் அருகே டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மரக்காணம்,

மரக்காணம் அருகே பிரம்மதேசத்தில் உள்ள அரியந்தாங்கல் சாலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதிதாக 2 டாஸ்மாக் கடைகள் அருகருகே திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ள சாலையை பிரம்மதேசம், அரியந்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கடைகளுக்கு மது குடிக்க வரும் மதுப்பிரியர்கள் போதை தலைக்கேறியதும் சாலையில் செல்லும் பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவிகளை கேலி, கிண்டல் செய்து வருவதாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பிரம்மதேசம், அரியந்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள், பொதுமக்களுக்கு இடையூறாக செயல்படும் அந்த 2 டாஸ்மாக் கடைகளையும் உடனே அகற்றக்கோரி சம்பந்தப்பட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தனர். இருப்பினும் டாஸ்மாக் கடைகள் அகற்றப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பிரம்மதேசம், அரியந்தாங்கல், மடவந்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த நுற்றுக்கும் மேற்பட்ட மக்கள் நேற்று காலை அந்த 2 டாஸ்மாக் கடைகளையும் திடீரென முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக இயங்கி வரும் இந்த டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் அல்லது வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கண்டன கோஷங்களை எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த மரக்காணம் தாசில்தார் சீனிவாசன், திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால், பிரம்மதேசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், அந்த 2 டாஸ் மாக் கடைகளையும் அகற்ற மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்ற கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story