பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் தனிநபர் கழிப்பிட மானியத்தில் கையாடல்: தற்காலிக ஊழியர் மீது போலீசில் புகார்


பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் தனிநபர் கழிப்பிட மானியத்தில் கையாடல்: தற்காலிக ஊழியர் மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 12 July 2017 4:15 AM IST (Updated: 12 July 2017 1:13 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் தனிநபர் கழிப்பிட திட்ட மானியத்தில் ரூ.24¼ லட்சம் கையாடல் செய்ததாக தற்காலிக ஊழியர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சின்னாம்பாளையத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 29). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் தற்காலிக பணியாளராக பணியில் சேர்ந்தார். அவர் அங்கு கணினி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில், ஒன்றிய கணக்குகளை அதிகாரிகள் தணிக்கை செய்தனர். அப்போது தனிநபர் கழிப் பிடம் கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு கொடுக்கும் மானியத்தொகையை மணிகண்டன் நூதன முறையில் கையாடல் செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து தணிக்கை துறை அதிகாரிகள் சென்னை ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில் புகார் செய்தனர். பின்னர் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் 10 பேர் கொண்ட குழுவினர் தெற்கு ஒன்றியத்திற்கு வந்து கணினி ஆபரேட்டர் மணிகண்டனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பணத்தை கையாடல் செய்ததை ஒப்புக்கொண்டார்.

இது குறித்து தெற்கு ஒன்றிய அதிகாரிகள் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் மீது புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து தெற்கு ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:-

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பிடம் கட்ட பயனாளிக ளுக்கு ரூ.12 ஆயிரம் மானியமாக கொடுக்கப்படுகிறது. இதில் ஒரு பயனாளிக்கு கொடுத்த ரசீதில் பெயரை மட்டும் மாற்றி, அதை வங்கிக்கணக்கில் செலுத்தி மானியத்தொகையை மணிகண்டன் வாங்கி உள்ளார். இதுபோல் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.24 லட்சத்து 37 ஆயிரத்து 552 கையாடல் செய்து இருப்பது தெரிய வந்து உள்ளது. அவர் கையாடல் செய்த பணத்தை ஒன்றிய அலுவலகத்தில் திருப்பி செலுத்தி இருந்தாலும் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story