மானாவாரி சாகுபடியை மேம்படுத்த 5 வட்டாரங்களில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை


மானாவாரி சாகுபடியை மேம்படுத்த 5 வட்டாரங்களில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை
x
தினத்தந்தி 12 July 2017 4:00 AM IST (Updated: 12 July 2017 1:50 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் மானாவாரி சாகுபடியை மேம்படுத்த 5 வட்டாரங்களில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருப்பூர்,

தமிழகத்தில் மானாவாரி விவசாயிகள் மேம்பாட்டிற்காக நீடித்த மானாவாரி விவசாயத்துக்கான இயக்கம் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் நடப்பாண்டு முதல் 4 ஆண்டுகளில் 2 லட்சம் எக்டர் பரப்பு பயனடைய திட்டமிடப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 1,000 எக்டர் கொண்ட 5 தொகுப்புகள் அவினாசி, ஊத்துக்குளி, காங்கேயம், மூலனூர், திருப்பூர் வட்டாரங்களில் செயல்படுத்தப்படுகிறது.

மானாவாரி மேம்பாட்டு திட்ட இயக்கப்பணிகள் என்பது நில மேம்பாடு, நீர்வள ஆதாரங்களை பெருக்குதல், உழவியல் தொழில்நுட்பம், மதிப்பூட்டிய வேளாண் பொருட்களை உற்பத்தி செய்து விவசாயிகளை தொழில் முனைவோர் ஆக்குதல், வேளாண் சேவை மையங்கள் தொடங்குதல், கால்நடை அபிவிருத்தி ஆகிய இனங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தேர்வு செய்யப்பட்ட வட்டாரத்தில் அதிக அளவில் மானாவாரி சாகுபடி செய்யப்படும் கிராமத்தை தேர்வு செய்து அங்கு 1,000 எக்டர் கொண்ட தொகுப்பை உருவாக்கி அதில் கோடை உழவு செய்து கொடுக்கப்படும். ஒரு எக்டருக்கு ரூ.1,250 உழவு பணிக்கு மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும். தொகுப்பில் உள்ள பகுதியில் நீர்வள ஆதாரத்தை மேம்படுத்த தடுப்பணைகள், கசிவுநீர் குட்டைகள் உருவாக்க தொகுப்பு ஒன்றுக்கு ரூ.7½ லட்சம் வழங்கப்பட்டு திருப்பூர் மாவட்டத்தில் 5 வட்டாரங்களில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மானாவாரி மேம்பாட்டு இயக்க திட்டத்தின் மூலம் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துகள் சாகுபடியை ஊக்குவிக்க 50 சதவீத மானிய விலையில் விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட சத்துகளும் 50 சதவீத மானிய விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளை மதிப்பு கூட்டிய வேளாண் சார்பு தொழில் முனைவோர் ஆக்க தொகுப்பு ஒன்றுக்கு ரூ.4 லட்சம் வீதம் தொகுப்பில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் சிறிய அளவிலான பருப்பு மில், எண்ணெய் உற்பத்தி, தானிய மாவுகள் தயாரிப்பு சம்பந்தமாக விவசாயிகள் ஒருங்கிணைந்து தொழில்முனைவோர் செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படும். இதுதவிர பருப்பு மில், எண்ணெய் மில், விற்பனை மையங்கள் தொடர்பாக குழுவுக்கு ரூ.6 லட்சம் கலெக்டரின் அனுமதியின் பேரில் மாவட்ட கமிட்டி ஒப்புதலுடன் வழங்கப்படும்.

வேளாண் சேவை மையம் மற்றும் வேளாண் எந்திரங்கள் வாடகைக்கு விடுதல் மையம் தொடர்பாக தொகுப்பு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.8 லட்சம் வரை வேளாண் பொறியியல் துறை மூலம் வழங்கப்படும். கால்நடை பராமரிப்பு துறை மூலம் இனவிருத்தி, அபிவிருத்தி பணிகள், ஊட்டச்சத்து குறைபாடுகளை களைய நடவடிக்கைகள் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே தேர்வு செய்யப்பட்ட தொகுப்பில் உள்ள அவினாசி, ஊத்துக்குளி, காங்கேயம், மூலனூர், திருப்பூர் வட்டார விவசாயிகள் இந்த திட்டத்தில் பங்கு பெற்று பயன்பெறலாம்.

இந்த தகவலை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Next Story