அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி, தாராபுரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
தாராபுரம்,
அமராவதி அணையின் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும், அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் போதிய அளவு மழைபெய்யவில்லை. இதனால் அமராவதி குடிநீர் திட்டத்தை நம்பியிருந்த அனைத்து ஊர்களிலும் வரலாறு காணாத அளவில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. குடிநீர் திட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணறுகள் அனைத்தும் வற்றிவிட்டது. இதனால் பொது மக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள்.
அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில், கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குடிநீர் தேவைக்காக அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி, கரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் நேற்று தாராபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை அமராவதி வடிநில கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் அவர்கள் கூறியதாவது:–
அமராவதி குடிநீர் திட்டத்தை நம்பியுள்ள ஏராளமான கிராமங்களில் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். ஒரு குடம் குடிநீர் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கிராம மக்கள் குடிபெயரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடவேண்டும். எனவே தாராபுரம் பகுதிக்கு குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்துவிடும் போது கரூர் மாவட்ட பகுதிகளுக்கும் சேர்த்து தண்ணீர் திறந்துவிட வேண்டும். அவ்வாறு தண்ணீர் திறந்துவிடவில்லை என்றால் பல்வேறு போராட்டங்களை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
முற்றுகையில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது உயர் அதிகாரிகளிடம் இது குறித்து ஆலோசனை நடத்தி தண்ணீர் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதைதொடர்ந்து முற்றுகையை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.