சட்ட விதிகளின்படிதான் செயல்படுவேன்: கவர்னர் கிரண்பெடி விளக்கம்
சட்ட விதிகளின்படிதான் செயல்படுவேன் என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.
புதுச்சேரி,
புதுவை சட்டமன்றத்துக்கு பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த 3 பேரை மத்திய அரசு நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்ததும் அவர்களுக்கு கவர்னர் கிரண்பெடி பதவிப்பிரமாணம் செய்து வைத்ததும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நியமன எம்.எல்.ஏ.க்களை ஏற்க முடியாது என்று சபாநாயகர் வைத்திலிங்கம் நிராகரித்துள்ளார்.
இந்தநிலையில் புதுவை கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–
கவர்னர் மக்கள் நலனில் அக்கறை கொண்டிருப்பது எப்படி ஒருவருக்கு பாதிப்பினை ஏற்படுத்த முடியும்? புதுவையில் நாளிதழ்களில் வெளியாகும் செய்திகளை பார்க்கையில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று சிலர் விரும்புவதாக தெரிகிறது.
நேர்மையான, சிறப்பான செயல்களை மேற்கொள்வது அவர்களை இடையூறு செய்வதுபோல் உள்ளது. இதுபோன்ற நிலை எத்தனை நாட்கள்தான் நீடிப்பது? மக்கள் பல்வேறு வழிகளில் பாதிக்கப்படுகின்றனர். மக்களுக்கு நல்ல வாழ்க்கைத்தரம் அமைய வேண்டாமா?
இதுபோன்ற சூழ்நிலையை எனது வாழ்க்கை முழுவதும் பார்த்து வருகிறேன். மக்களின் நலனுக்காக தீர்வுகளை உருவாக்கவே நாம் உள்ளோம். எனவே இவையெல்லாம் எனக்கு வியப்பினை தரவில்லை.
நான் கடமையை செய்ய வந்துள்ளேன். சட்ட விதிகளின்படி செயல்படுவேன். நீதித்துறைதான் அனைத்துக்கும் இறுதி முடிவெடுக்கும் அமைப்பாகும். நாம் அதை எப்போதும் நாடி உண்மையான தீர்வை பெறலாம்.
இவ்வாறு அந்த பதிவில் கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.