புதுவை மாநிலத்தில் குடிநீர், வீட்டு வரி ஆன்–லைன் மூலம் செலுத்த நடவடிக்கை


புதுவை மாநிலத்தில் குடிநீர், வீட்டு வரி ஆன்–லைன் மூலம் செலுத்த நடவடிக்கை
x
தினத்தந்தி 12 July 2017 4:30 AM IST (Updated: 12 July 2017 2:24 AM IST)
t-max-icont-min-icon

புதுவை மாநிலத்தில் குடிநீர் வரி, வீட்டுவரி ஆன்–லைன் மூலம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பெறக்கூடிய உரிமங்கள் மற்றும் அனுமதிகளை ஒற்றை சாரள முறையில் பெரும் திட்டம், மாவட்ட கலெக்டருக்கான கோப்புகள், கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மென்பொருள் மற்றும் பத்திரம் பதிய இணைய தளம் வழியாக நேரம் பெறும் முறை ஆகியவற்றிற்காக புதிய இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழா நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் நடந்தது. விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு இந்த திட்டங்களை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

மக்கள் சார்ந்த சேவைகள் காலத்தோடு அவர்கள் இருக்கும் இடத்திலேயே நேரடியாக கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வந்தது. மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்த சேவைகளை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளனர். அந்த அடிப்படையில் புதுவை மாநிலத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதுவும் டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

புதுவை மாநிலத்தில் சுமார் 104 சேவைகளை பொதுமக்கள் ஆன்லைன் மூலம்பெறும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம். பிறப்பு, இறப்பு சான்றிழ்கள், அரசின் மூலம் கிடைக்கும் நிதி உதவிக்கான விண்ணப்பங்கள், முதியோர் மற்றும் விதவைகள் உதவித்தொகை படிவம் ஆன்–லைன் மூலம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது படிப்படியாக மற்ற துறைகளிலும் அமல்படுத்தப்படும். பட்டா எளிதாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக வீட்டு வரி, குடிநீர் வரி ஆகியவற்றை ஆன்–லைன் மூலம் செலுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசின் திட்டங்கள் அனைத்தையும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு சேவையை ஆரம்பித்துள்ளோம். குறிப்பாக மக்கள் நலத்திட்டங்கள் எளிதாக மக்களை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுவையில் புதிதாக தொழிற்தொடங்க வருபவர்களுக்கு ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக தொழில் தொடங்க வருபவர்கள் ஒரு மனு தாக்கல் செய்து தேவையான ஆவணங்களை கொடுத்தால் போதும், அனைத்து துறைகளின் அனுமதியும் வழங்கப்படும். ஒரு மாதத்தில் அவர்கள் தொழில் தொடங்கலாம்.

இதன் மூலம் காலதாமதம் தவிர்க்கப்படும். கோப்புகள் எந்த துறையிலும் தேங்காமல் இருக்கும். தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தை பயன்படுத்தி துப்பாக்கி வைத்திருப்போர் அதற்கான உரிமம், பட்டாசு தொழிற்சாலை மற்றும் வெடிமருந்து தொழிற்சாலைகள் வைப்பதற்கான அனுமதி, பெட்ரோல் பங்க் நடத்த அனுமதி போன்றவற்றை ஆன்லைன் மூலம் பெற முடியும். இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து தேவையான ஆவணங்களை கொடுத்தால் போதும். அனுமதியை பெறலாம்.

புதுவையில் தெரு விளக்குகள் அனைத்தும் என்.இ.டி. பல்புகளாக மாற்றப்பட உள்ளன. இதன் மூலம் 75 சதவீதம் மின்சாரத்தை சேமிக்க முடியும். தெருவிளக்குகளுக்காக தற்போது மாதம் ரூ.2 கோடி வரை மின்கட்டணம் செலுத்தப்படுகிறது. இந்த கட்டணம் பெருமளவில் குறையும். அனைத்து திட்டங்களையும் ஆன்–லைன் மூலம் செயல்படுத்துவதால் அவை பொதுமக்களுக்கு சென்று சேரும் நேரம் குறையும். இருந்த இடத்தில் இருந்து கொண்டே பொதுமக்கள் தாக்கல் செய்துள்ள மனுவின் நிலையை தெரிந்து கொள்ளலாம். அதிகாரிகளுக்கு வேலை சுமை வெகுவாக குறையும்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.


Next Story