சம்மன் கொடுத்தும் ஆஜராகாததால் பிரபல ரவுடி ஸ்ரீதரின் மகன் மீது போலீசார் வழக்கு
காஞ்சீபுரம் எல்லப்பன் நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலைமுயற்சி, ஆள்கடத்தல், வியாபாரிகளை மிரட்டி நிலங்களை குறைந்த விலைக்கு வாங்குதல் உள்பட பல்வேறு வழக்குகள் காஞ்சீபுரம் மற்றும் சென்னை போலீஸ் நிலையங்களில் உள்ளன.
காஞ்சீபுரம்,
இந்த நிலையில் ஸ்ரீதர் தலைமறைவாகி விட்டார். தற்போது அவர் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவரை கண்டுபிடித்து காஞ்சீபுரம் கொண்டுவரும் முயற்சியில் சர்வதேச போலீசின் உதவியை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி நாடி உள்ளார்.
சொத்துகள் முடக்கம்இதற்கிடையே சமீபத்தில் ஸ்ரீதரின் மனைவி குமாரி, வெளிநாட்டில் உள்ள ரவுடி ஸ்ரீதரை பார்த்துவிட்டு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தபோது அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
மேலும் அமலாக்கப்பிரிவு போலீசார், ஸ்ரீதரின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கி ‘சீல்’ வைத்து உள்ளனர். காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டு சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் ஸ்ரீதரை குற்றவாளியாக அறிவித்தது.
போலீசார் சம்மன்இந்த நிலையில் ஸ்ரீதரின் மகன் சந்தோஷ்குமார் (வயது 24) லண்டனில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்னை விமான நிலையத்திற்கு வருவதாக சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி மற்றும் போலீசார் விமான நிலையத்திற்கு விரைந்து சென்று சந்தோஷ்குமாரை காஞ்சீபுரத்திற்கு அழைத்து வந்தனர்.
காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் வைத்து சந்தோஷ்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவரது தந்தை ஸ்ரீதர் எந்த நாட்டில் இருக்கிறார்? என்று துருவி துருவி விசாரித்தனர். மேலும், விசாரணைக்காக மீண்டும் 11–ந் தேதி (நேற்று) ஆஜராக சந்தோஷ்குமாருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.
வழக்குப்பதிவுஇதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பேரில் சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், ரவுடி ஸ்ரீதரின் மகன் சந்தோஷ்குமார் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு வழங்க காஞ்சீபுரத்தில் உள்ள குற்றவியல் கோர்ட்டில் மனு செய்தார். மனுவை விசாரித்த குற்றவியல் நீதிபதி வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்கினார்.
இதையடுத்து சந்தோஷ்குமார் மீது 174–வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.