‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரி கோவையில், அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரி கோவையில் அனைத்து கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
கோவை,
மருத்துவ படிப்பிற்கு மாணவர்கள் சேர மேல்நிலப் பள்ளியில் தேர்ச்சி பெறுவதுடன். நீட் தேர்வு எழுதி அதிலும் தேர்வாக வேண்டுமென்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. அதன்படி தேர்வு நடந்து முடிந்துள்ளது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீட் தேர்வு மூலம் தமிழகத்தில் ஏற்கனவே உள்ள இடஒதுக்கீடு முறை பறிக்கப்படும், கிராமப்புற மாணவர்கள் சி.பி.எஸ்.இ. மாணவர்களுடன் போட்டி போட முடியாத நிலை ஏற்படும். குறிப்பாக சமூக நீதி மறுக்கப்படும் நிலை ஏற்படும். எனவே இந்த தேர்வு முறையை ரத்து செய்யவேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் 2–ந் தேதி சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. மேலும் கடந்த 22–ந் தேதி நீட் தேர்வில் கிராமப்புற இளைஞர்களுக்கு 85 சதவீதம் இடம் ஒதுக்கி அவசர சட்டம் இயற்றி உள்ளது.
இந்த நிலையில் திராவிடர் கழகத்தினர் ‘நீட்’ தேர்வு குறித்து தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தியும் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக கோவை மண்டல செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட திராவிடர் கழக தலைவர் சிற்றரசு வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி, புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், மாணவர் அணி இணை அமைப்பாளர் ஆறுமுகபாண்டி மற்றும் நாச்சிமுத்து(தி.மு.க.), கோவை மாநகர் மாவட்ட தலைவர் மயூரா ஜெயக்குமார், ராமநாகராஜ், காமராஜ்துல்லா (காங்.), மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம்(இந்திய கம்யூ.), மாவட்ட செயலாளர் வெ.ராமமூர்த்தி(மார்க்சிஸ்டு கம்யூ.), கோவை மண்டல அமைப்பாளர் சுசிகலையரசன், மாநகர மாவட்ட செயலாளர் ஜோ.இலக்கியன்(விடுதலை சிறுத்தைகள் கட்சி) மற்றும் ஆதிதமிழர் பேரவை, முஸ்லீம் லீக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம், எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கட்சி கொடிகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.