பழனி அருகே மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி


பழனி அருகே மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி
x
தினத்தந்தி 13 July 2017 3:45 AM IST (Updated: 13 July 2017 3:33 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே மர்மகாய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான். சாவு எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

பழனி,

பழனி அருகே உள்ள காவலப்பட்டி ஊராட்சி சித்தரேவை சேர்ந்தவர் முருகன். கூலித்தொழிலாளி. அவருடைய மகன் பாபுராஜ் (வயது 8). இவன் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3–ம் வகுப்பு படித்து வந்தான். இவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதையொட்டி அவனை பாப்பம்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் காய்ச்சல் குணமாகவில்லை. மர்ம காய்ச்சல் இருப்பதாக கூறி கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாபுராஜ் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை மாணவன் பரிதாபமாக இறந்தான்.

பழனி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏற்கனவே மர்ம காய்ச்சலால் 16 பேர் இறந்துள்ளனர். தற்போது மாணவன் பாபுராஜ் சேர்த்து பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம், சாக்கடை கால்வாய், குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் இருத்தல் போன்ற காரணங்களால் மர்மகாய்ச்சல் பரவுவதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story