உடுமலையில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்


உடுமலையில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 13 July 2017 4:00 AM IST (Updated: 13 July 2017 1:06 AM IST)
t-max-icont-min-icon

உடுமலையில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

உடுமலை

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் பல்வேறு உள்ளாட்சி பகுதிகளுக்கு நேரில் சென்று கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி, திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட ஜி.வி.ஜி.நகர், ஆண்டாள் சீனிவாசன் லே–அவுட் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் நேற்று வீடு, வீடாக நேரில் சென்று கலெக்டர் பழனிசாமி ஆய்வு செய்தார். அப்போது, பொதுமக்களிடம், டெங்கு கொசுப்புழு உற்பத்தியாவதை தடுக்கும் வகையில், தண்ணீர் தேங்கி நிற்காதவாறு பார்த்துக்கொள்ள அறிவுரை வழங்கினார்.

மேலும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள டயர்கள் தேவையில்லாத பொருட்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்கி, கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் என்பதால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அத்துடன் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது, உடுமலை ஆர்.டி.ஓ. சாதனைக்குறள், தாசில்தார் தயானந்தன், நகராட்சி நகர் நல அதிகாரி டாக்டர் அருண், பூச்சியியல் வல்லுனர்கள் சேகர், சாந்தி, நகரமைப்பு அதிகாரி(பொறுப்பு) வெங்கடேசன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.


Next Story