ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
‘நீட்’ தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு,
தமிழகத்தில் ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி அனைத்து அரசியல் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள் இடம்பெற்றுள்ள ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். திராவிடர் கழக அமைப்பு செயலாளர் சண்முகம் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பேராசிரியர் காளிமுத்து, தி.மு.க. மாநகர செயலாளர் மு.சுப்பிரமணியம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொறுப்பாளர் ராஜ்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல அமைப்பு செயலாளர் நா.விநாயகமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராஜேந்திரன், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைத்தலைவர்கள் பாட்ஷா, அர்சத்அலி உள்பட பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் திராவிடர் கழக மாவட்ட துணைச்செயலாளர் மணிமாறன் நன்றி கூறினார்.