புதிய கல்வி கொள்கை இறுதி வடிவம் பெறும் முன்பு ஆசிரியர் சங்கங்களின் ஆலோசனைகளையும் கேட்க வேண்டும்


புதிய கல்வி கொள்கை இறுதி வடிவம் பெறும் முன்பு ஆசிரியர் சங்கங்களின் ஆலோசனைகளையும் கேட்க வேண்டும்
x
தினத்தந்தி 13 July 2017 4:00 AM IST (Updated: 13 July 2017 12:58 AM IST)
t-max-icont-min-icon

புதிய கல்வி கொள்கை இறுதி வடிவம் பெறும் முன்பு, ஆசிரியர் சங்கங்களின் ஆலோசனைகளையும் கேட்க வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோவை,

தமிழ்நாடு அரசு கல்லூரி கழகம், கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்), பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர்களின் தேசிய குழு ஆகியவை சார்பில், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் வீரமணி தலைமை தாங்கினார்.

அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் கழக மண்டல செயலாளர் திருநாவுக்கரசு, அரசு கல்லூரி ஆசிரியர் கழக மண்டல செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் விவரம் வருமாறு:–

கல்லூரி ஆசிரியர்களுக்கான 7–வது ஊதியக்குழுவில், பல்கலைக்கழக மானியக்குழுவின் (யு.ஜி.சி.) பரிந்துரையை வெளியிட்டு, நடைமுறைப்படுத்த வேண்டும். 7–வது ஊதியக்குழுவை அரசு பணியாளர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் அமல்படுத்த வேண்டும். தற்காலிக, பகுதிநேர, குறுகியகால, சுயநிதி ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும்.

ஆசிரியர்களின் தர உயர்வை நிர்ணயிக்கும் மதிப்பீட்டு புள்ளியை திரும்பப்பெற வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தையே மீண்டும் அமல்படுத்த வேண்டும். 6–வது ஊதியக்குழுவில் உள்ள அனைத்து முரண்பாடுகளையும், 7–வது ஊதியக்குழுவில் களைய வேண்டும்.

கல்விக்கான நிதியை குறைப்பதை தவிர்க்க வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் போன்ற அமைப்புகளை கலைத்துவிட்டு, புதிய அமைப்புகள் ஏற்படுத்துவதை கைவிட வேண்டும். கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு தரத்தின் அடிப்படையில் தன்னாட்சி அந்தஸ்து வழங்குவதை கைவிட வேண்டும்.

தேசிய தகுதித்தேர்வு (நெட்), மாநில தகுதித்தேர்வு (செட்) ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றால் பிஎச்.டி. ஆராய்ச்சி மேற்கொள்ள முடியும் என்ற திட்டத்தை திரும்ப பெற வேண்டும். புதிய கல்வி கொள்கையை வடிவமைத்து இறுதி வடிவம் கொடுப்பதற்கு முன்பு, ஆசிரியர் சங்கங்களின் ஆலோசனைகளை கேட்க வேண்டும். கல்வியை வியாபாரம் ஆக்குவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.


Next Story