காசிமேடு பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து 2 குழந்தைகள் உள்பட 4 பெண்கள் காயம்
காசிமேடு பகுதியில், வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உள்பட 4 பெண்கள் காயம் அடைந்தனர்.
ராயபுரம்,
சென்னை காசிமேடு, சிங்காரவேலன் நகர், 3–வது தெருவை சேர்ந்தவர் தேசமுத்து, இவர், மீன் பிடிக்க கடலுக்கு சென்று விட்டார். இவரின் மனைவி ரம்யா (வயது 30). இவர்களின் குழந்தைகள் நிலா (4), பூமிகா (2).
காசிமேடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து மழை பெய்து வந்தது. அப்போது வீட்டில் ரம்யா, அவரின் 2 குழந்தைகள் மற்றும் தேசமுத்து தாய் ராதிகா (60) ஆகியோர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர்.
தொடர் மழையால் நள்ளிரவில் தேசமுத்துவின் வீட்டின் மேற்கூரை இடிந்து அங்கிருந்த சிமெண்டு ஓடு தூங்கி கொண்டிருந்த 4 பேர் மீது விழுந்தது. இதில் 4 பேரும் காயம் அடைந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த காசிமேடு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் அங்கு சென்று காயமடைந்த 4 பேரையும், போலீஸ் ஜீப்பில் அழைத்து சென்று ராயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்று அனைவரும் வீடு திரும்பினர். ரம்யாவுக்கு விலா எலும்பில் கம்பி குத்தி காயம் ஏற்பட்டதால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், 2000–ம் ஆண்டில், தமிழக அரசால், கட்டிக்கொடுக்கப்பட்ட இந்த வீடுகள் மிகவும் பழுதடைந்து உள்ளது. கனமழையால் பல வீடுகள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.