சத்துணவு பணியாளர்களை தேர்வு செய்ய நேர்காணல்


சத்துணவு பணியாளர்களை தேர்வு செய்ய நேர்காணல்
x
தினத்தந்தி 13 July 2017 4:30 AM IST (Updated: 13 July 2017 2:45 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி, நல்லம்பள்ளி ஒன்றியங்களில் சத்துணவு பணியாளர்களை தேர்வு செய்ய நேர்காணல் நடைபெற்றது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் உள்ள சத்துணவு மையங்களில் 232 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களும், 409 சமையல் உதவியாளர் பணியிடங்களும் காலியாக உள்ளன. மொத்தம் உள்ள 641 சத்துணவு பணியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பணியாளர்களை தேர்வு செய்வதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தர்மபுரி, நல்லம்பள்ளி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்றது. தர்மபுரி ஒன்றியத்தில் 14 பணியிடங்களுக்கும், நகராட்சி பகுதியில் 9 பணியிடங்களுக்கும், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் 39 பணியிடங்களுக்கும் என மொத்தம் 62 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு இந்த நேர்காணல் நடத்தப்பட்டது.

தர்மபுரி ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு நடந்த நேர்காணலில் மொத்தம் 616 பேரும், நகராட்சி பகுதிக்கான நேர்காணலில் 353 பேரும் கலந்து கொண்டனர். நல்லம்பள்ளி ஒன்றிய பகுதிக்கு நடந்த நேர்காணலில் 930 பேர் கலந்து கொண்டனர். நேர்காணலில் பங்கேற்றவர்களிடம் தேர்வுக்குழுவினர் உரிய ஆவணங்களை சரிபார்த்து ஆய்வு நடத்தினார்கள்.

இதேபோன்று தர்மபுரி ஊராட்சி ஒன்றியத்தில் 40 சமையல் உதவியாளர் பணிக்கும், நகராட்சி பகுதியில் 5 உதவியாளர் பணியிடங்களுக்கும், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் 69 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கும் நேர்காணல் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

நேர்காணலையொட்டி அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடந்த நேர்காணலை மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சித்ரா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

Related Tags :
Next Story