சிறையில் விதிமுறைகளை மீறி சசிகலாவுக்கு தனி சமையலறை உள்ளிட்ட சிறப்பு வசதிகள்
பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தனி சமையலறை உள்ளிட்ட சிறப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளதாக சிறைத்துறை போலீஸ் டி.ஐ.ஜி. ரூபா பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார்.
பெங்களூரு
இந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கர்நாடக சிறைத்துறையின் முதல் பெண் அதிகாரியாக டி.ஐ.ஜி. ரூபா பதவி ஏற்£ர். இந்த நிலையில் அவர் பரப்பனஅக்ரஹாரா சிறையில் திடீர் சோதனை நடத்தி உள்ளார். இந்த நிலையில் கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் இந்த திடீர் சோதனை தொடர்பாக டி.ஐ.ஜி. ரூபாவிற்கு நோட்டீசு அனுப்பி உள்ளார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையிலும் சோதனையின்போது தெரிய வந்த விவரங்கள் குறித்தும் கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவுக்கு டி.ஐ.ஜி. ரூபா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–
‘‘பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக புகார்கள் வந்தன. இந்த புகாரை தொடர்ந்து கடந்த 10–ந் தேதி சிறையில் ஆய்வு செய்தேன். சிறையில் உள்ள கைதிகளிடம் லஞ்சம் பெற்று கொண்டு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வினியோகம் செய்யப்படுவது தெரியவந்தது.மேலும், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு தனி சமையல் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. சிறை விதிமுறைப்படி இது தவறு. இந்த சலுகை இன்னும் தொடருவதாக உள்ளது. இதற்காக தங்களுக்கு ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சிறையில் ஆய்வு செய்ததை எதிர்த்து எனக்கு நோட்டீசு அனுப்பி உள்ளீர்கள். சிறைத்துறை டி.ஐ.ஜி. என்ற முறையில் சிறையில் ஆய்வு செய்ய எனக்கு உரிமை உள்ளது. அதன்படி ஆய்வு செய்துள்ளேன். இதுபற்றி விசாரணை நடத்தி பாரபட்சமின்றி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம் தங்கள் மீது சுமத்தப்பட்டு உள்ள களங்கத்தை போக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.