ராசிபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டம்


ராசிபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 14 July 2017 4:15 AM IST (Updated: 14 July 2017 3:43 AM IST)
t-max-icont-min-icon

பெண்கள் சுகாதார வளாகத்தை திறக்க கோரி ராசிபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராசிபுரம்,

ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 21-வது வார்டில், ஏரிக்கடைக்கால் ரோட்டில் பெண்கள் சுகாதார வளாகம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அந்த வளாகம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மேம்படுத்தப்பட்டது. அதில் 7 கழிப்பறைகள் மற்றும் தண்ணீர் தொட்டி உள்ளது. அந்த கழிப்பறைக்கு செல்லும் தண்ணீர் குழாய் சேதம் அடைந்துவிட்டது. குழாயை சரிசெய்து அந்த தொட்டிக்கு தண்ணீரை விட நகராட்சி நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே பொது சுகாதார வளாகத்தை திறந்து பயன்பாட்டிற்கு விடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பா.ம.க.வினர் 50-க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகத்தை நேற்று மதியம் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கழிப்பறைகளை பயன்பாட்டிற்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சுகாதார வளாகத்தை பயன்படுத்த விடாமல் தடுப்பவர்கள் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

உரிய நடவடிக்கையை எடுப்பதாக நகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்ததன்பேரில் தர்ணா போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Related Tags :
Next Story