மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்ததால் தகராறு: கல்லூரி மாணவர்கள் கோஷ்டி மோதல்- பரபரப்பு


மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்ததால் தகராறு: கல்லூரி மாணவர்கள் கோஷ்டி மோதல்- பரபரப்பு
x
தினத்தந்தி 14 July 2017 4:30 AM IST (Updated: 14 July 2017 3:46 AM IST)
t-max-icont-min-icon

மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்ததால் தகராறு: கல்லூரி மாணவர்கள் கோஷ்டி மோதல்- பரபரப்பு

நாகர்கோவில்,

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு கிராம, நகர்ப்புற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் காலை- மாலை வேளைகளில் அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், பள்ளி- கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள், கூலி வேலைக்கு செல்வோரின் கூட்டம் ஏராளமாக இருப்பது வழக்கம். இவ்வாறு பள்ளி- கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளை அவ்வப்போது மாணவர்கள், இளைஞர்கள் கேலி- கிண்டல் செய்வதாக புகார்கள் வந்தன. இதையடுத்து காலை, மாலை நேரங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இதேபோல் நேற்று காலையிலும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

அப்போது பஸ்சுக்காக காத்து நின்ற நான்கைந்து கல்லூரி மாணவிகளில், ஒரு மாணவிக்கு ஒரு மாணவன் காதல் கடிதம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த வேறு சில மாணவர்களுடன் நின்று கொண்டிருந்த ஒரு மாணவர் வேகமாக வந்து, அந்த மாணவிக்கு நீ எப்படி காதல் கடிதம் கொடுக்கலாம்? என்று கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் இரு மாணவர்களும் கோஷ்டிகளாக சேர்ந்து மோதிக்கொண்டனர். இந்த மோதல் அவர்களுக்கிடையே கைகலப்பாக மாறியது.

இதுபற்றிய தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசாரை கண்டதும் மாணவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் போலீசார் சில மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் எச்சரித்து அவர்களை அனுப்பி வைத்தனர். திடீரென கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் அண்ணா பஸ்நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story